புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளைப் பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க மருத்துவர்கள் தேவையில்லை என்று, சிறிலங்காவின் சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது இரசாயன மருந்து கொடுக்கப்பட்டதாக என்று பரிசோதிக்க அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் இணங்கியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஐந்து நாள் மருத்துவ முகாமை நடத்துவதற்காக வந்துள்ள அமெரிக்க விமானப்படை மருத்துவக் குழுவினர் மூலம் முன்னாள் போராளிகளைப் பரிசோதிக்க முடியுமா என்று தாம் அமெரிக்கத் தூதுவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் தெரிவு செய்யப்பட்ட சிலரை அவ்வாறு பரிசோதிக்கலாம் என்று பதிலளித்தாகவும் முதலமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,
‘புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்வதற்கு, அமெரிக்க மருத்துவர்கள் தேவையில்லை.
தகுதிவாய்ந்த மருத்துவர்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கின்றனர். அவர்களைக் கொண்டே பரிசோதனைகளை நடத்தலாம்.
இதுபற்றி ஏற்கனவே வட மாகாண சுகாதார அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளேன்.
வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி தேவைப்பட்டால், அவ்வாறு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.