சிறிலங்காவிலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் தான் மதுப்பாவனை அதிகம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று நடந்த போதை தடுப்பு செயல் திட்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மதுபான வரியை அதிகம் செலுத்தும் மூன்று மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடத்திலும், நுவரெலியா இரண்டாவது இடத்திலும், மட்டக்களப்பு மூன்றாவது இடத்திலும் உள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டார். “இந்த மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் அதிகளவில் வாழ்வது குறிப்பிடத்தக்கது.
“நுவரெலிய மாவட்ட மக்கள் ஆண்டுக்கு 16 ஆயிரம் மில்லியன் ரூபாவை மது மற்றும் புகையிலைக்குச் செலவிடுகின்றனர். இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள குடும்பங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியவில் ஆண்களை விடப் பெண்கள் அதிகளவில் மது அருந்துவதாகவும் அதிகளவு மதுப்பாவனைக்கு கிராம மட்டத்தில் உள்ள வறுமையே முக்கிய காரணம்” என்றும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.
நுவரெலிய நாட்டின் முக்கியமான பொருளாதாரக் கேந்திரங்களில் ஒன்றாக விளங்குகின்ற போதும், அதிகபட்ச ஊட்டச்சத்துக் குறைபாடு இங்கேயே நிலவுகிறது.
குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் வரவு செலவுத் திட்டத்தில் 16 பில்லியன் ரூபாவை ஒதுக்குகிறோம், ஆனால், கிராமிய மக்கள் ஆண்டுக்கு 32 பில்லியன் ரூபாவை மதுவுக்காக செலவிடுகின்றனர்” என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.