Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » மதுபான கடைகள் இல்லாத வல்வெட்டித்துறை நகரம் ஓர் முன்மாதிரி
தெணியம்பையின் இன்றைய தோற்றம்

மதுபான கடைகள் இல்லாத வல்வெட்டித்துறை நகரம் ஓர் முன்மாதிரி

அண்மைக்காலமாக இலங்கை மக்களையும் குறிப்பாக இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப் பொருட்களுக்கு எதிராக இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒவ்வொரு நகரம் நகரமாகப் பிரசாரம் செய்து வரும் பொழுது,சாராயம் மற்றும் ஏனைய மதுபான விற்பனையில் யாழ்ப்பாணமே முன்னிலை வகிப்பதாகவும்,இரண்டாவது இடத்தை நுவரெலியாவும், மூன்றாவது இடத்தை மட்டக்களப்பும் வகிப்பதாகவும்  கூறிய தகவல்கள் ஒவ்வொரு தமிழரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

அதன்படி வருடமொன்றிற்கு யாழ்ப்பாண மக்கள் பயன்படு;ததும் மதுபானத்தின் அளவு 60 பில்லியன் ரூபா பெறுமதியானவை என்றால்,தமிழ் மக்களின் வாழ்வு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்துப் பார்க்கும் பொழுது,வல்வெட்டித்துறையின் நகரபிதாவாக இருந்த திரு.நடராஜா அனந்தராஜ் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக 2012 ஆம் ஆண்டில் ‘போதையற்ற ஒரு நகரத்தை’ உருவாக்கியுள்ளமை குறித்து ஒவ்வொரு தமிழனும்  பெருமைப்படவேண்டும்.

கடந்த 70 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித்துறையில் உள்ள தெணியம்பைத் தெருவில் இயங்கி வந்த மொத்தமாகவும், சில்லறையாகவும்  சாராய விற்பனை செய்து வந்த  தவறணை, வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராக இருந்த  திரு.ந.அனந்தராஜ் அவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக  அதனை மூடிவிடுமாறு கோரிக்கை விடுத்தபோதும்,அதனை மூடிவிட முன்வராத நிலையில் அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கையூட்டு வழங்க எடுத்த முயற்சிகள் தோல்விஅடைந்த நிலையில் சில தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட சிபார்சுக் கடிதத்தையும் கொண்டு வந்து கொடுத்தபொழுது, அதனைப் பார்வையிடாமலேயே கிழித்தெறிந்த நகர பிதா மதுபானசாலையின் உரிமையாளரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையில், அதனை மூடுவதற்கான கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். அப்போதைய சாராயத் தவறணையின் உட்புறப் பகுதியை  மறைத்து உயர்ந்த மதில் கட்டப்பட்டு இருந்ததால்,அதற்கு உட்புறமாகவே நகரின் சில கௌரவமான முக்கிய புள்ளிகளும்,சில உயர்தரப் பாடசாலைகளின் உயர்தர வகுப்பு மாணவர்களும் குந்தி இருந்து பியர் போத்தல்களையும்,கால் போத்தல் சாராயத்தையும் குடித்து ஏப்பமிட்டுக் கொண்டிருந்தார்கள், அதற்குள்ளே நிற்பவர்களை எவராலும் அடையாளம் காணமுடியாதிருந்ததால் தெருவழியாக தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று வருகின்ற மாணவிகளைத் துன்புறுத்தியும் வந்தனர். அதனால் மாலை நேரங்களில் பெண் பிள்ளைகள் அந்த வழியாக வருவதைத் தவிர்த்து, வித்தனை வழியாகச் சென்று வந்தனர். அது தொடர்பாக சாராயத் தவறணை முதலாளியிடம் தெரிவித்த போதும், அது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை;அந்த நிலையில் சகர சபையில் சில நல்ல உள்ளங்கள் சமுக மளித்திருந்த நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட நகரபிதா, அந்த மதிலில் பின்வருமாறு கடிதம் ஒன்றை எழுதி ஒட்டி அதனை மூடுவதற்கான காலக்கெடுவையும் விதித்திருந்தார்.

‘எதிர்வரும் 28.02.2012 முதல் இந்தத் தவறணை மூடப்படவேண்டும்.அவ்வாறு மூடத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற அறிவுறுத்தலுடன் நகர பிதா ந.அனந்தராஜ் அவர்களின் கையொப்பத்துடன் துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டது.

சாரயத் தவறணையால் முன்பு சீரழிந்த தெணியம்பை
சாரயத் தவறணையால் முன்பு சீரழிந்த தெணியம்பை

அந்தத் துண்டுப் பிரசுரத்தை அப்படியே  புகைப்படம் எடுத்த மதுபானசாலையின் உரிமையாளர் யாழ் மேல் நீதிமன்றத்தில்,  நகரபிதா ந.அனந்தராஜ் அவர்களுக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட விடயமாக, ‘தனது ஜீவனோபாயத் தொழிலைத் தடை  செய்யும் வகையில் தன்னிச்சையாகவும் தான் தோன்றித்தனமாகவும் ஏனைய உறுப்பினர்களின் அனுமதியின்றியே முடிவெடுத்ததால்,அந்த இடத்தில் 70 வருடங்களுக்கு மேலாக சாராயத் தவறணையைதை; தாங்கள் பரம்பரையாக நடத்திவருவதால்,தொடர்ந்தும் அதே இடத்திலேயே இயங்கச் செய்ய அனுமதிக்கவேண்டும்’ என்று முறைப்பாட்டைச் செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.அவருக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தின் பிரபல சட்டத்தரணி திரு.இராஜரத்தினம் என்பவர் ஆஜராகியிருந்தார்.இவர் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய சகாவாகவும் இருந்தவர் என்தும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குத் தனிப்பட்ட முறையில் திரு.ந.அனந்தராஜ் அவர்களை மட்டுமே எதிராளியாகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்டதால், நகரசபையின் சார்பில் அவரால் எதிர்மனுக் கொடுக்கமுடியாது போனது. தனிப்பட்ட முறையியேலயே சட்டத்தரணியையும் ஏற்பாடு செய்யவேண்டிய நிலையில் இருந்தார். அந்த நேரம் அதிர்ஸ்ட வசமாக ஒரு இளம் சட்டத்தரணியும், பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளராகவும்,யாழ் சிவில் சமுகத்தின் முக்கிய உறுப்பினராகவும்  இருந்த திரு.குமாரவடிவேல் குருபரன் அவர்கள் திரு.ந.அனந்தராஜ் அவர்களுக்கு ஆதரவாக முற்று முழுக்க இலவசமாகவே வழக்காட முன்வந்தார். ஆயினும் அவருக்கான சிறு கொடுப்பனவையாவது பெற்றுக் கொள்ளவேண்டுமென்று நகரபிதாவினால் கேட்டக்பபட்ட பொழுது, அந்த இளம் சட்டத்தரணியான திரு.கு.குருபரன் அவர்கள் கூறிய வார்த்தைகள் அந்த நீதிமன்ற வளாகத்தில் நின்ற பொது மக்களையே கண்கலங்கவைத்து விட்டது.

‘இப்படி ஒரு நல்ல காரியத்தை நீங்கள் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த முன்வந்ததற்கு நாங்கள் தான் நன்றியுடன் இருக்கவேண்டும்….இன்று யாழ்ப்பாணத்தின் ஒ;வவொரு கிராமங்களையும்,இவைபோன்ற மதுபான சாலைகள் சீரழித்துக் கொண்டு எங்களுடைய இனத்தையே அழித்துக் கொண்டு வரும் வகையில், நீங்கள் ஒரு ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்தவர் என்பதால்,அதனுடைய தாக்கங்களை உணர்ந்திருக்கின்றீர்கள். அந்த வகையில் நாங்கள் இதில் கூட உதவமுடியாவிட்டால் மனிதர்களாக இருப்பதில் பிரயோசனமில்லைத் தானே…இதனை என்னுடைய வழக்காகவே பார்க்கின்றேன்….’  என்று கூறிய அந்த உறுதியான வார்த்தைகள் ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. அவரது அற்புதமான வாதத்திறமையினால் மூன்று தவணைக்குள் அந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அதன்படி,  யாழ்ப்பாணம் மேல் நீதி மன்றத் தீர்ப்புக்கு அமைவாக  வல்வெட்டித்துறையில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் எந்தவிதமான மதுபான சாலைகளும் அமைக்கப்படக் கூடாது என்ற தீர்ப்புடன் 2012 ஜுலை மாதம் தொடக்கம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. கடந்த 70  வருடங்களாக பொது மக்களினதும் மாணவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் குடிமனைகள், பாடசாலை, தனியார் கல்வி நிலையம், பால்சாலை, வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றிற்கு இடையுறு களையும் சமூகச் சீர்கேடுகளையும்  ஏற்படுத்தி வந்த மேற்படி மதுபானசாலை,  நீதி மன்றத் தீர்ப்புக்கு அமைய மூடப்பட்டு விட்டதால் இன்று வல்வெட்டித்துறை மக்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதன் விளைவை நகரசபையின் அமர்வுகளின் பொழுது சில உறுப்பினர்களின் எதிர்ப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நகரபிதா அவர்கள் சந்தித்தபோதும், நிலை குலையாது, எவவித மிரட்டல்களுக்கும் அடிபணியாது இருந்ததால், வல்வெட்டித்துறை மண் புனிதப்படுத்தப்பட்ட மண்ணாக இன்று விளங்குகின்றது. இவைபோன்ற துணிச்சலான சில முடிவுகளை எடுத்ததாலேயே அவர் பல முனைகளிலும் எதிர்ப்புக்களைச் சந்தித்திருக்கின்றார்.

இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் மதுபானசாலைகளோ அல்லது சாராயத் தவறணைகளோ இல்லாத ஒரே ஒரு உள்ளுராட்சி மன்றம் வல்வெட்டித்துறை தான் என்ற பெருமையைப் பெற்றுள்ள மண் வல்வெட்டித்துறை தான் என்பதில் இதிலும் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில்; வல்வையராகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டும் அல்லவா….! இதனை ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் கடைப்பிடிப்பார்களேயானால், தற்போதைய ஜனாதிபதி வீதிவீதியாகச் சென்று  பிரசாரம் செய்து வருவது போல் ‘போதையற்ற நகரத்தை நிஜவாழ்விலேயே  கட்டிஎழுப்பமுடியும். இதில் ஜனாதிபதி மட்டுமல்ல,காவல் துறையினர், பிரதேச சபைகள்,பிரதேச செயலகங்கள், மதுவரித் திணைக்களம் என்பனவற்றுடன் பொது மக்களும் ஒன்று சேர்ந்த ஆதரவு அளித்தால் ஒரு குறுகிய காலத்திற்குள் போதையற்ற ஒரு நாடாகக் கட்டி எழுப்பமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *