மட்டக்களப்பில் 4000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருந்த தேசிய நீரியல்வளப் பண்ணை, பல்வேறு தரப்புகளில் இருந்தும் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளால், வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
பல்வேறு தரப்புகளும் நிபந்தனைகளை விதித்து எதிர்ப்புகளைத் தெரிவித்து, வருவதால் மட்டக்களப்பில், தேசிய நீரியல்வளப் பண்ணைத் திட்டத்தை மட்டக்களப்பில் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று, கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலர் மங்கலிக அதிகாரி, கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு நேற்று அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள நாயாறில், 1200 ஏக்கர் நிலப்பகுதியை உள்ளடக்கியதாக இந்தப் பண்ணையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
4000 மில்லியன் ரூபா செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மன்னார் மற்றும் மட்டகளப்பில்,இந்த ஆண்டு இரண்டு தேசிய நீரியல் வளப் பண்ணைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் மட்டக்களப்பில் இந்த பண்ணையை அமைப்பதற்கு, பல்வேறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், அமைப்புகளும் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட்டதால், மட்டக்களப்பில் இருந்து இந்த திட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை , மட்டக்களப்பு மக்களுக்கு இந்த திட்டம் தேவையில்லை என்றால், வடக்கில் வேறு பொருத்தமான ஒரு இடத்துக்கு அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக, சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.