சிறிலங்காவில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு தேவையான  நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும், அமெரிக்கா மிகவும் உறுதியான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஒன்றிணைவு தொடர்பான கற்கைகளுக்கான நிறுவகத்தில், அமைதியைக் கட்டியெழுப்பலும் மனித உரிமைகளுக்குமான திட்டத்தை நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் அவ்வாறு குறிப்பிடடுள்ளார்.

“சிறிலங்காவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள. எனினும், இன்னமும் அதிகமாக செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பான செயலகத்தை உருவாக்கியுள்ளமை,  தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஐ.நா சிறப்பு  அறிக்கையாளர்கள், நிபுணர்களின் வருகையை ஊக்குவித்தமை, என்பனவற்றை முன்னேற்றகரமான நடவடிக்கைகளாக விபரித்துள்ள நிஷா பிஸ்வால் இவை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகளை வடிமைக்க சிறந்ததாக அமைய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

“நல்லிணக்க செயல்முறைகள் இப்போது தான் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இன்னும் கடுமையான பணிகள் இருக்கின்றன. இந்தப் பயணத்தில் சிறிலங்கா தனித்துப் பயணிக்க வேண்டியதில்லை. சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராகவே இருக்கிறது” என்றும் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.