சிறிலங்கா படையினர் வசமுள்ள தமது சொந்த நிலங்கள், மீள ஒப்படைக்கப்படும் என்று, தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நிலத்தை திருப்பி அளிப்பதாக எங்கள் மீது சிலர் குற்றம்சாட்டுகின்றனர். நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு சொந்தமான நிலத்தை ராணுவம் கைப்பற்றி வைத்திருந்தால், உங்களது நிலை எவ்வாறு இருக்கும்?
தமது நிலத்தை மீளப் பெறுவதற்காக தமிழர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அல்ல, 27 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளை போரில் நாம் தோற்கடித்திருக்கலாம். ஆனால், விடுதலைப்புலிகள் தோன்றக் காரணமான பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன.
மீண்டும் தனிநாடு கோரி போராட்டம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் எமது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் எடுத்து வருகிறது. நாட்டில் தற்போது எங்கிருந்தும் அச்சுறுத்தல் கிடையாது.
எனது அரசாங்கம் பதவியேற்ற காலம் முதல், நட்பு நாடுகள் அனைத்தும் சிறப்பான ஒத்துழைப்பை அளித்து வருகின்றன.
சிறிலங்காவை ஓரம்கட்டி வந்த நாடுகள் அனைத்தும், நட்புக்கரத்துடன் தற்போது வரவேற்கின்றன.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் ஆகிய நாடுகள், சிறிலங்காவுக்கு பாதுகாப்பு தொடர்பான பயிற்சியை வழங்கி வருகின்றன. இந்த நிலைமை இப்போது முன்னேற்றமடைந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.