கூட்டு எதிரணியினரால், புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்குவார் என்று, தேசிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கூட்டு எதிரணியினர் புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாகவும், அதன் தேசிய அமைப்பாளராக பசில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, விமல் வீரவன்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விமல் வீரவன்ச, “ புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக, கூட்டு எதிரணி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
அவ்வாறு புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், அதற்கு மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்குவார்.
பசில் ராஜபக்ச கட்சியின் உறுப்பினராகவே இருப்பார். அவரை தேசிய அமைப்பாளராக நியமிக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இடியப்பச் சிக்கலான புதிய கட்சியை உருவாக்கும் விவகாரம் சரியான நேரத்தில், இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.