சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பத்தரமுல்லையில் உள்ள அவரது செயலகத்தில் நேற்று சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்று, புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
“உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர், அந்தக் கட்சியினாலேயே வேட்டையாடப்படுகின்றனர். எந்தவொரு கட்சியினதும் ஆதரவு இல்லாத நிலையில் நாம் இருக்கிறோம். இந்த நிலையில் புதிய கட்சி ஒன்றை அமைப்பதே ஒரே வழியாக இருக்கிறது.” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் கோரிக்கையை செவிமடுத்த மகிந்த ராஜபக்ச, இந்தக் கோரிக்கையை தாம் தீவிரமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன்னதாக தம்மைச் சந்தித்த முன்னைய உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளும், இதே கோரிக்கையை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து, அடுத்த சில நாட்களுக்குள் இறுதியான முடிவு எடுக்கப்படும் என்று மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச கூட்டு எதிரணியினருடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.