பிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரான்சின் தேசிய நாள் நிகழ்வின் போது, நேற்றிரவு பொதுமக்கள் கூட்டத்தினுள் உச்ச வேகத்தில் பாரஊர்தியைச் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
சுமார் 2 கி.மீ தூரத்துக்கு வாகனம் செலுத்தப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
எனினும், பிந்திய நிலைமைகள் தொடர்பான தகவல்களுக்கான அங்குள்ள சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து பிரான்சில் அவசரநிலைப் பிரகடனம் நீடிக்கப்பட்டுள்ளது.