விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், அவர், விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பாக பேசுவதற்காக, பிரபாகரனுடன் நடத்திய முதல் சந்திப்புக் குறித்து, விபரித்துள்ளார்.
அதில், “பிரபாகரனை முதல்தடவையாகச் சந்திப்பதற்கு நான் சென்றிருந்த போது, சிறிலங்காவில் யாருமே அதனை அறிந்திருக்கவில்லை.
சிறிலங்கா பிரதமருக்குக் கூட அது தெரியாது. சந்திக்கச் செல்வதற்கு சிறிலங்கா அதிபரே, எமக்கு அனுமதி அளித்திருந்தார்.
நாங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசத்தில் பிரபாகரனைச் சந்தித்தோம். அதற்காக நாங்கள் உலங்குவானூர்தியில், சென்றிருந்தோம்.
தாழ்வாகவும், மேலுயர்ந்தும் பறந்து சென்றது அது. மலைகளாக இருந்திருந்தால் பயங்கரமாக இருந்திருக்கும்.
நாங்கள் செல்வதை சிறிலங்கா இராணுவத்தினரோ, விடுதலைப் புலிகளோ அறிந்திருக்கவில்லை. அதனால் அவர்கள் இலகுவாக சுட்டு வீழ்த்தக் கூடும்.
அங்கு நாங்கள் பிரபாகரனைச் சந்தித்தோம். அது ஒரு நல்ல சந்திப்பு. அமைதி முயற்சிகளில் அவர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினர்.
ஆனால், தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் மகத்தான நிலையை நிலையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.
அந்த நேரத்தில் அவர் கடவுளாக, படைப்பின் மூலமாக, மீட்பராக போற்றப்பட்டார்.
தமிழ் மக்கள் ஏன் அவரை அப்படிப் போற்றினார்கள் என்று எம்மால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.