அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தாம் போட்டியிடக் கூடும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஜப்பான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது பதவிக்காலத்துக்காக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, அரசியல்வாதிகளுக்கு ஓய்வு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
போர் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், அனைத்துலக அழுத்தங்களுக்குப் பயந்து, சிறிலங்கா அரசாங்கம் பின்வாங்கும் என்று நம்பிய பிரபாகரன், நிலைமைகளை தவறாக கணித்திருந்தார் என்பதே தனது பார்வை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னையும் கூட அவரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் மகிந்த ராஜபக்ச.