பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்குக் கொள்வனவு செய்வது தொடர்பாக இழுபறி நீடித்து வருகின்ற நிலையிலேயே, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
எனினும், ஜேஎவ்-17 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியுடனான பேச்சுக்களில் முக்கிய விடயமாக கலந்துரையாடப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவான பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தே கலந்துரையாடப்படவுள்ளது.
கடந்த ஆண்டு சிறிலங்கா விமானப்படைத் தளபதி பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்தே, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி, அதிநவீன போர் விமானங்களை இயக்கும் திறன் பெற்றவர் என்பதுடன், போர் விமானங்களில் 3000 மணிநேரம் விமானியாகப் பறப்பில் ஈடுபட்ட அனுபவத்தையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.