கொஸ்கமவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இன்று மாலை 6 மணியளவில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஸ்கமவில் உள்ள சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கிலேயே வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பாரிய தீ ஏற்பட்டுள்ளதுடன், பாரிய வெடி அதிர்வுகள் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிவிபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் எவரேனும் காயமடைந்தனரா என்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்து அவிசாவளை – கொழும்பு வீதி, அவிசாவளை -கலுகல்ல வீதிகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
கொஸ்கம இராணுவ முகாமில் இருந்து 6 கி.மீ சுற்றாடலில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கம இராணுவ முகாம் வெடிவிபத்தினால் எழுந்துள்ள பாரிய புகை மண்டலத்தை வெகுதொலைவில் இருந்தே அவதானிக்க முடிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை அடுத்து சிறிலங்கா இராணுவத் தளபதி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
ஆயுதக் கிடங்கில் உள்ள வெடிபொருட்கள் இன்னமும் வெடித்துக் கொண்டிருப்பதால், அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினர் நுழைய முடியாதிருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆயுதக் கிடங்கு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இராணுவ, கடற்படை, விமானப்படை தீயணைப்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.
கொஸ்கமவில் வெடித்துச் சிதறிய ஆயுதக் கிடங்கு, சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆயுதக் கிடங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.