பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிடம் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடந்து வரும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில் நேற்றுமுன்தினம், சிறிலங்கா தொடர்பான மீளாய்வு ஆரம்பமாகியது.
இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும், புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள், சிறிலங்கா குழுவிடம் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்த கேள்விகளுக்கு நேற்று சிறிலங்கா குழு பதிலளித்திருந்தது.
இதன்போதே, குற்றச்சாட்டுகள் பதியப்படாமல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை என்று சிறிலங்கா அரச குழு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எவரும் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் சிறிலங்கா குழுவினர் கூறியுள்ளனர்.