வடக்கு கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் முழுமையாக மீள ஒப்படைக்கப்படாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்த காங்கேசன்துறை தொடருந்து நிலையப் பகுதிகளை உள்ளடக்கிய 201 ஏக்கர் நிலப்பகுதியை நேற்று பொதுமக்களிடம் ஒப்படைத்த பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார்.
“சிறிலங்கா படையினர் வசமுள்ள தனியார் காணிகளை மீள ஒப்படைப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனினும் படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் மீள ஒப்படைக்கப்படாது. பாதுகாப்புத் தேவைகளுக்கு அவசியமான காணிகள் படையினரால் மீள ஒப்படைக்கப்படாது.
அவ்வாறு மீளக் கையளிக்க முடியாத காணிகளின் பரப்பளவு எவ்வளவு என்பதை இப்போது கூறமுடியாது.
எனினும், மீளக் கையளிக்க முடியாத காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.