Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » படுகொலைகளில் ஈடுபட்ட படையினரைக்…

படுகொலைகளில் ஈடுபட்ட படையினரைக்…

படுகொலைகளில் ஈடுபட்ட படையினரைக் காப்பாற்றும் முயற்சியில் இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்படும் அரசியல் படுகொலைக் குற்றச்சாட்டுகள் விடயத்தில், விட்டுக் கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம், சிறிலங்கா இராணுவத் தளபதி கோரியுள்ளார்.

சட்டமா அதிபரை அவரது பணியகத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா சந்தித்து  இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சத்ஹண்ட சிங்கள இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான காவல்துறை விசாரணைகள் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை நியாயப்படுத்தியுள்ள சட்டமா அதிபர், ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டுக்கு சிறிலங்கா இராணுவம் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் அனைத்துலக சமூகமும் இந்த விசாரணைகளில் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகவும், ஜெனிவா அமர்வில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டியிருப்பதாகவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்குப் பின்னால் இருந்த அனைவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அடையாளம் காண முடிந்துள்ள நிலையிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதி, சட்டமா அதிபரை அவசரமாகச் சந்தித்துள்ளார்.

இந்தப் படுகொலைக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜர் அன்சார் தலைமையிலான மூன்று குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றிய விசாரணைக்காக இராணுவத்தினரின் நாளாந்த செயற்பாட்டு பதிவேட்டை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தயங்கி வருகிறது.

லசந்த படுகொலை தொடர்பாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. கொலை நடந்த போது, சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் எங்கே இருந்தனர் என்று சோதனைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதேவேளை, முன்னைய இராணுவப் புலனாய்வுத்துறைத் தலைவர் பிரிகேடியர் சுரேஸ் சாலியையும் விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதி்மன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தப் படுகொலை நடந்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐரோப்பாவில் தங்கியிருந்து விட்டு, இவர் 2009 மார்ச்சிலேயே நாடு திரும்பியிருந்தார் என்ற போதிலும் இவரிடம் விசாரணை நடத்த அனுமதி அளி்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா விசாரித்துள்ளார்.

அத்துடன் தமது படையினருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதற்கு காவல்துறை மா அதிபர், சட்டமா அதிபரின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டியது தமது கடமை என்று பதிலளித்துள்ளார் என்றும் சத்ஹண்ட செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *