ஹன்வெல்ல பகுதியில், சிவப்பு நிறத்திலான ஒரு பொருள் வந்து விழுந்து வெடித்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்றதொரு சம்பவத்தை தாம் வாழ்நாளில் கண்டதில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள், வீதிகளில் சிக்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெடிவிபத்தை அடுத்து மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. வெடிப்புச் சத்தங்கள் 50 கி.மீற்றரக்கு அப்பால் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும், எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் நிலைமைகள் கண்காணிக்கப்படுகின்றன.

கொஸ்கம முகாமில் எவ்வாறு வெடிவிபத்து ஏற்பட்டது என்றோ, அங்கு என்ன நடக்கிறது என்றோ தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று பதில் காவல்துறை மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த இந்த விபத்தினால் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று கணிக்கமுடியாதிருப்பதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து குண்டுகள் வெடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில், எவராலும் முகாமை நெருங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை முடியும் வரை காத்திருப்பதாகவும், அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த வெடிவிபத்தினால் காயமடைந்த எவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்படவில்லை. எனினும், மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 20 நோயாளர் காவு வண்டிகளும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, அவிசாவளை பகுதியில் உள்ள அரச செயலகங்கள், பாடசாலைகள் நாளை மூடப்பட்டிருக்கும் என்று சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார்.