கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு அங்கு நடந்த தீவிபத்து தடுப்பு ஒத்திகை காரணமாக இருந்திருக்கலாம் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சலாவ இராணுவ முகாம் பகுதியில் சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, வெடிவிபத்து நேரிட்டதாக குறிப்பிட்டார்.
என்ன சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது என்று எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காத அவர், அதில் தீவிபத்து தடுப்பு ஒத்திகையும் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
‘தீவிபத்து தடுப்பு ஒத்திகையினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். எனினும், வெடிவிபத்துக்கான சரியான காரணம் இது தான் என்று கூற முடியாது.
தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தான் காரணம் என்னவென்று தெரியவரும். நேரம் வரும் போது அதுபற்றி வெளிப்படுத்தப்படும்.
தற்போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, முப்படைகளையும் உள்ளடக்கிய இராணுவ நீதிமன்ற விசாரணையும் இடம்பெறுகிறது.
எவ்வாறாயினும் இந்த அனர்த்தத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த சில மாதங்களில், முப்படையினரதும் எல்லா ஆயுதக் கிடங்குகளும் சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு மாற்றப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.