தமிழக ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்களின் அஞ்சலி நிகழ்வு!
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வு குறித்த செய்தியை தமிழக ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.
தமிழ்நாட்டு தலைவரான ஜெயலலிதா அவர்களது மறைவிற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டமையை முக்கிய விடயமாக தமிழக ஊடகங்கள் பதிவு செய்துவருகின்றன.
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாம்களில் உள்ள மக்கள் ஜெயலலிதா அவர்களது படத்தினை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றமையும் தமிழக ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இன்னிலையில் திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்கள் ஜெயலலிதா அவர்களது படம் பொறித்த பதாகை வைத்து வாழை மரங்கள் கட்டியும் தோரணங்கள் கட்டியும் பொதுச்சுடர் ஏற்றியும் உணர்வெழுச்சியுடன் நடத்திய அஞ்சலி நிகழ்வு தமிழக ஊடகங்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
தினத்தந்தி குழுமத்தின் தந்தி தொலைக் காட்சி நேற்று மதியம் (07/12/16) 2 மணியளவில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் திருச்சியில் ஈழத்தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வு குறித்து விரிவாக கூறப்பட்டதுடன் அவ்விடத்தில் இருந்து நிகழ்வினை நேரலையாக வழங்கப்பட்டிருந்தது.
அதே போன்று NEWS 18 தொலைக்காட்சியிலும் அஞ்சலி நிகழ்வு குறித்து நிகழ்விடத்தில் இருந்து செய்தி வழங்கப்பட்டிருந்தது.
‘த இந்து’ ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களிலும் தினத்தந்தி நாளிதல் மற்றும் Indian Express ஆங்கில நாளிதழிலும் இது குறித்து செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் தமக்கே உரிய தனித்துவத்துடன் நிகழ்வை ஒழுங்கமைத்து நடத்தியிருந்தமையால் தமிழக ஊடகப்பரப்பில் தவிர்க்க முடியாதவாறு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.