சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.
கடந்தவாரம் கண்டியில் வெடித்தன இனவன்முறைகளை அடுத்து. சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்திருந்தது.
வன்முறைகள் தற்போது கட்டுக்குள் வந்துள்ள போதிலும், சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்குவதற்கு இழுத்தடித்து வருகிறது.
இந்தநிலையில், அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.
சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தியுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், கவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்சிசன் கீச்சகப் பதிவு ஒன்றில், சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்குவதற்கான நேரம் வந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பவ்ரல், கபே போன்ற சிவில் அமைப்புகளும், இந்த தடையை நீக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.
சிறிலங்காவில் சிமூக வலையமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஜெனிவாவில் முறையிடவும் சில தரப்புகள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.