அமெரிக்காவில் பெரும்பான்மையின மக்கள், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதை, சிறிலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்த, பேராசிரியர் நளின் டி சில்வா எழுதிய, “ எனது உலகத்தில் 30ஆண்டுகள்“ என்ற நூல் வெளியீட்டு விழாவில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“அமெரிக்க அதிபர் தேர்தலில், வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்பிற்கு,எதிரணி வேட்பாளருடன் தொக்கி நின்ற சிறுபான்மையினரே தடையாக இருந்தனர்.அதனால் அவர் வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
ஆனாலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அவரின் அரசியல் கொள்கைகள் வரவேற்கத்தக்கவை. சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் எந்த பாதிப்புக்களும் ஏற்படாது.
சிறிலங்கா இந்தச் சந்தர்ப்பத்தை உரிய விதத்தில் பயன்படுத்த வேண்டியது காலத்தின் தேவை.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை இந்த சந்தர்ப்பத்தில் பயனடையும் வகையில் அமையுமா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
அமெரிக்க வாக்காளர்களின் பக்கத்திலிருந்து பார்க்கும் போதும், அந்நாட்டு புத்திஜீவிகள் கருத்துக்களின் அடிப்படையில் இருந்து பார்க்கும் போதும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆதரவு ட்ரம்பிற்கு கிடைக்கவில்லை. எனவே அவர் தோல்வி அடையப்போவது உறுதி என்று கூறப்பட்டது.
அதேநேரம் கறுப்பினத்தவர்களின் ஆதரவும் இவருக்கு கிடைக்காது என்ற கருத்துக்கள் மிகவும் வலுப்பெற்றிருந்தன.
ஆனால் அந்நாட்டு வெள்ளையின பெரும்பான்மையினர் ஒன்று திரண்டு டொனால்ட் ட்ரம்பிற்கு வாக்களித்தன் காரணமாக அவர் சுலபமாக வெற்றிபெற்றார்.
இதனை இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களும் ஒரு பாடமாக கொள்ள வேண்டும். இதனால் உருவாக்கப்பட்ட கருத்தியலே மிக முக்கியமானதாகும்.
பெரும்பான்மையினரின் ஆதரவினால் மாத்திரம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால், அது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை வலுப்பெற்றால் மாத்திரமே சிறுபான்மையினரும் வலுப்பெறுவர். இந்த சிறந்த பாடத்தை நாம் தற்போது அமெரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
அதேநேரம் ட்ரம்ப் என்பவர் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் போக்கிலிருந்து விடுபட்ட ஒருவர்.
மனித உரிமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் பேசப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. எமது நாட்டு மக்களிடத்தில் மனித உரிமைகள் இயல்பாவே நிறைந்துள்ளன.
ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இல்லாத பல விடயங்களை மனித உரிமைகள் என்ற பேரில் எமது நாட்டினுள் புகுத்த பார்க்கின்றது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது விடுக்கப்படும் அழுத்தங்களில் இருந்து விடுபடுவற்கு சாதகமான காரணியாகவும் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமையும்.
ஒபாமாவின் காலத்தில் மனித உரிமை விவகாரம் பெரிதாக இருப்பதற்கும் ட்ரம்பின் வெற்றிக்கு தடையாக இருந்தவர்களே காரணம்.
அதனால் ஹிலாரியின் வெற்றிக்காக தேங்காய் உடைத்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தேங்காய் நீரை குடிக்கட்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.