ஐதேக பொதுச்செயலரும் அமைச்சருமான கபீர் காசிம் நேற்று பீஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத் தலைவர் சொங் தாவோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, தென் சீனக் கடல் பிரச்சினைக்கு, சீனா மற்றும் கரிசனை கொண்ட நாடுகளுக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுக்கள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிராந்திய விவகாரங்கள், வெளிநாட்டுத் தலையீடுகளுக்குச் செல்லாமல், நேரடியாகச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்கள் மூலம், தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய அமைதியைப் பேணுவது மற்றும் அபிவிருத்தியில் சீனா முக்கியமான சக்தியாக உள்ளது என்றும், இந்த விடயத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசாங்கமும் இன்னும் அதிக செயற்திறனுடன் செயற்படும் என்று சிறிலங்கா நம்புவதாகவும், கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீனா சென்றிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத் தலைவர் சொங் தாவோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.