வடக்கு, கிழக்கில் அனுமதியின்றி பௌத்த விகாரைகள் கட்டப்படுவது மற்றும் புத்தர் சிலைகள் வைக்கப்படுவது குறித்தும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளது.
கொழும்பில் நேற்றுமுன்தினம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் அனுமதியின்றி பௌத்த விகாரைகள் கட்டப்படுவது மற்றும் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சிறிலங்கா பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அத்துடன், வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்காத போதிலும், சிங்களக் குடியேற்றங்களின் மூலம் இனப்பதற்றத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முற்படுவதாகவும் சிறிலங்கா பிரதமருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.