பல முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
பல்வேறு படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுத்துறையின் உதவியைக் கோரியிருந்தனர். ஆனால் இராணுவப் புலனாய்வுத்துறை, விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களையோ சான்றுகளையோ வழங்கி ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான விசாரணை கல்கிசை நீதிமன்றத்தில் நடந்த போது, விசாரணைக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் வழங்குமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
லசந்த விசாரணையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிலரின் நடமாட்டங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்களைக் கோரியுள்ளதாக அறியப்படுகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், லசந்த கொலை தொடர்பான விசாரணைக்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையில் லசந்த கொலை விசாரணைக்கு ஒத்துழைக்காவிடின், இராணுவத் தளபதி மற்றும், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு எதிராக, கொலைக் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்க மறுப்பதாக, குற்றவியல் வழக்கை பதிவு செய்யப் போவதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, உயர்மட்டங்களுடன் தொடர்புடைய வழக்குகளில் சான்றுகளை மறைத்த குற்றச்சாட்டில் பல காவல்துறை உயர் அதிகாரிகளையே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தடுத்து வைத்துள்ள நிலையில், இராணுவத்தினரை சட்டத்துக்கு மேலானவர்களாக கருத முடியாது என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.