மனித உரிமைகள் விவகாரத்தில், சிறிலங்கா மேலும் முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ள அதேவேளை, வெளித்தலையீடுகளின்றி உள்நாட்டு விவகாரங்களுக்குத் தீர்வு காண, சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நேற்று சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர், வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து, பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த அறிக்கை தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இதன்போது, கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் பிரதிநிதி, வெளியாரின் தலையீடுகள் இல்லாமல் தமது உள்நாட்டு விவகாரத்துக்குத் தீர்வு காண சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
அதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, கானா, மசிடோனியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், உரையாற்றிய போது, சிறிலங்கா தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதில், மேலும் முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான அடுத்த அறிக்கைக்காக காத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
அதேவேளை, மசிடோனிய நாட்டுப் பிரதிநிதி கருத்து வெளியிடுகையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு காலம் தேவை என்று நாம் அறிவோம். எனினும் தற்போதுள்ள வாய்ப்புகளை காலவரம்பின்றி நீடிக்கக் கூடாது.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில், தீர்மானத்தில் உள்ள பந்திகளுக்கு ஏற்ப, அனைத்துலக ஆதரவு மற்றும் பங்களிப்புடன், சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்க மசிடோனியா வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்ட நோர்வே பிரதிநிதி, சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும், நல்லிணக்க, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் செயற்பாடுகள் அனைத்தும், பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூகம், பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை அடிப்படையாக கொண்டு இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, பிரித்தானியப் பிரதிநிதி உரையாற்றுகையில், இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரித்தானிய பிரதிநிதி இன்னமும் அதிகளவான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வடக்கில் இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவாக நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.