அமைதித் தேவைக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக, ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக சிறிலங்காவும் ரஷ்யாவும் பேச்சுக்களை நடத்தியுள்ளன.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யாவின், அரச அணுசக்தி நிறுவனமான, ரொசாரொம்மின், பிரதிப் பணிப்பாளர், நிக்கலொய் ஸ்பாஸ்கி, சிறிலங்கா அமைச்சர்கள் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோருடன் இதுகுறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்
கடந்த 16ஆம், 17ஆம் நாள்களில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
அணுசக்தியை அமைதித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக, சிறிலங்காவுடன் பேச்சுக்களை நடத்தியதாக, ரொசாரொம்மின், பிரதிப் பணிப்பாளர், நிக்கலொய் ஸ்பாஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மேலதிக பேச்சுக்களை நடத்தவும், ரஷ்யாவில் உள்ள, அணுசக்தி மையங்களை பார்வையிடவும், ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யாவின், அரச அணுசக்தி நிறுவனமான, ரொசாரொம்மின், பிரதிப் பணிப்பாளர், நிக்கலொய் ஸ்பாஸ்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.