இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிலங்காவில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவவுள்ளன. 10 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த இரண்டு திட்டங்களிலும், ரஸ்யா மற்றும் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன.
சிறிலங்காவின் தேவையை ஈடுசெய்யும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவத் தேவைக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் இந்த தொழிற்சாலைகளை நிறுவும் உடன்பாட்டில் ரஸ்ய மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் உடன்பாடு செய்துள்ளனர்.
சிறிலங்காவில் மருந்து உற்பத்தித் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள 28 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றில் ரஸ்யா, இந்தியா, இஸ்ரேல் நிறுவனங்களும் அடங்கும் என்றும், இந்த நிறுவனங்கள் ஆயுர்வேத மருந்துகளையும் உற்பத்தி செய்து சிறிலங்காவின் தேவையை ஈடு செய்து கொண்டு மிகுதியை ஏற்றுமதி செய்யவிருப்பதாக அரச மருந்துக் கூட்டுத்தாபன தலைவர் சயுர சமரசுந்தர தெரிவித்துள்ளார்.