தற்போது பதவி நீடிப்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தளபதியான லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலம்  எதிர்வரும், ஓகஸ்ட் 21 ஆம் நாள் முடிவடையவுள்ள நிலையில்,  இவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாவிட்டால், அடுத்த இராணுவத் தளபதியாக தற்போது சேவையிலுள்ள, ஆறு மூத்த மேஜர் ஜெனரல்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டியிருக்கும்.

இந்தப் பதவிக்குத் தகுதி வாய்ந்த சில மேஜர் ஜெனரல்கள் இராணுவத்திற்குள் இருக்கின்ற போதிலும், தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது பதவியிலுள்ள  ஆறு மூத்த மேஜர் ஜெனரல்களும் இவ்வாண்டு ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே இப்பதவி நீடிப்பு இடம்பெறவுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

அத்துடன் இந்த ஆறு இராணுவ அதிகாரிகளும் ஓய்வுபெற்ற பின்னர், இரண்டாம் அணியிலுள்ள மூத்த இராணுவ அதிகாரிகளுள் ஒருவரையே சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இவர்களில் சிலர் முக்கிய அரசாங்க அமைச்சர்களின் சிபாரிசை ஏற்கனவே பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாட்டின் இராணுவத் தளபதியாக வரத்தகுதி பெற்ற மேஜர் ஜெனரல்களில் முதல் நிலையில் உள்ள மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள் 55 வயதை அடைவார். இவர் மிகவும் தகுதி பெற்ற இராணுவ அதிகாரி ஆவார்.

செப்ரெம்பரில் 55 வயதை நிறைவு செய்யும் மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா அடுத்த நிலையில் உள்ளார். எனினும், இவர் மீதான காணி விவகாரக் குற்றச்சாட்டு மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை இராணுவத்தை விட்டு வெளியேறி இருந்தமை போன்ற சில காரணங்களால் நாட்டின் இராணுவத் தளபதியாக வருவதற்கான தகுதி இவருக்குக் குறைவாகவே காணப்படுகிறது. ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்ற போது,  நாட்டை இராணுவ சதிக்குள் வீழ்த்துவதற்கான திட்டத்தை தீட்டியவர்களின் பட்டியலில் மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

அடுத்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக அடுத்த நிலையில் காணப்படுகிறார். இவர் போர்க் காலத்தில் முக்கிய பங்காற்றாவிடினும் கூட, முக்கிய சில அரசியல்வாதிகளால் விரும்பப்படும் ஒருவராக இவர் காணப்படுகிறார். தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதுடன், ஏனைய மூத்த இராணுவ அதிகாரிகள் ஓய்வுபெற்றால், அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதியை மேஜர் ஜெனரல் சன்ன குணதிலகவே கொண்டுள்ளார்.

வன்னிக்கான தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவும் இப்பதவிக்குத் தகுதியான ஒருவராவார். ஆனால் தற்போதைய அரசாங்கமானது மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை கொழும்பிற்கு இடம்மாற்றத் தீர்மானித்த போது, தான் தொடர்ந்தும் வன்னியின் கட்டளைத் தளபதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கையை முன்வைக்குமாறு சில புத்த பிக்குகளை பெரேரா தூண்டியதாக ‘த சண்டே லீடர்’ செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவும் வரும் நொவம்பர் மாதம் ஓய்வு பெறவேண்டியவர் ஆவார்.

அடுத்ததாக மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த. இவரும் நொவம்பர் மாதம் ஓய்வுபெற வேண்டியவர்.  யுத்தத்தில் வெற்றிகரமாகச் செயற்பட்டவர். முல்லைத்தீவில் இடம்பெற்ற இறுதி யுத்தம் வரை இராணுவத்தை வழிநடத்தியிருந்தார். எனினும், புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இவர் புலிகள் அமைப்பின் மிகவும் தீவிரத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருந்தார். இதனால் இராணுவத்தரப்பிற்கு அதிகூடிய இழப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் இவர் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, அனுதராதபுர ஒருங்கிணைப்பு அதிகாரியாகச் செயற்பட்டார். அதையடுத்து இவரிடம் இருந்த பொறுப்புகள், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் இந்தப் பொறுப்பு மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிற்கு வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் உபுல் விதானகேயும் இந்தப் பதவிக்குப் பொருத்தமாக உள்ளபோதிலும், ஏனையவர்களுடன் ஒப்பிடும் போது இவரது தகுதி குறைவாகவே காணப்படுகிறது. இவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன உள்ளார். பிரபாகரன், சூசை, பானு, இரட்ணம் மாஸ்ரர் உட்பட புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் மரணத்திற்குப் பொறுப்பானவர் என ஊடகங்களில் பிரபலம் பெற்றுள்ளார். இவர் இந்த ஆண்டு செப்ரெம்பரில் ஓய்வுபெறவுள்ளார். இவர் சிறிலங்காவின் இராணுவத் தளபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இதேபோன்று, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவும் இப்பதவிக்குப் பொருத்தமானவர் ஆவார். இவர் அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளார். இதன்பின்னர் மேஜர் ஜெனரல் லசந்த விக்கிரமசூரிய. இவரும் அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்து வரும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இப்பதவிக்கு மிகவும் பொருத்தமாவர் ஆவார். சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கியதால் இவர் முன்னைய அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டிருந்தார். பொன்சேகாவால் ஆதரவளிக்கக்கூடிய மேஜர் ஜெனரல் சேனநாயக்க அடுத்த இராணுவத் தளபதியாக வருவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டாலும், இவர் இப்பதவிக்கு வந்தால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத்தை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு இடையூறுகள் ஏற்படலாம். எனினும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இதற்குப் பொருத்தமான ஒரு வேட்பாளராக உள்ளார். இவரும் அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளார்.

இதேபோன்று, அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் ஜனக வெல்கமவும் இப்பதவிக்குப் பொருத்தமானவர் ஆவார். அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் உதய பெரேராவும் இதற்குப் பொருத்தமான ஒரு வேட்பாளராவார். இவர் மிகவும் கடும் உழைப்பாளியாகவும் விழிப்புணர்வு மிக்க அதிகாரியாகவும் காணப்படுகிறார். இவர் தனது கட்டளையின் கீழ் செயற்படும் இராணுவ வீரர்களிடமிருந்து ஆகக்கூடிய வெளிப்பாட்டை எதிர்பார்க்கும் ஒருவராவார். இவரது இறுக்கமான நடவடிக்கையால் சிலர் அச்சம் கொண்டாலும் கூட, இராணுவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இவர் விளங்குவதாக ஏனையோர் கூறுகின்றனர்.

இவ்வாறு பல மேஜர் ஜெனரல்கள் உள்ள போதிலும் இவர்களில் யார் அடுத்த இராணுவத் தளபதியாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது கேள்விக்குறியே.

இராணுவத்தில், சிறிலங்கா இராணுவத்தின் பொதுவான சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் எப்போது இராணுவத்தில் சேர்கிறாரோ அதை அடிப்படையாகக் கொண்டே அவரது பதவிக்காலம் கணிக்கப்படுகிறது. எனினும், ஒரு அதிகாரி மற்றையவரை விட உயர் பதவியை வகிக்க முடியும். ஆனால் அதிகூடிய நிலையில் உள்ளவர்களுக்கு அப்பால் இளநிலை அதிகாரிகள் பதவி உயர்வுகள் வழங்கப்பட முடியாது.

ஆனால் இவற்றுக்கு மாறாக முன்னாள் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க குறித்த சில இளநிலை அதிகாரிகளுக்கு, முதுநிலை மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு வழங்கியிருந்தார். இதனால் சில மேஜர் ஜெனரல்கள் ஏழு ஆண்டுகளாக அதே நிலையில் பதவி வகித்துள்ளனர். இது தமக்கு எதிராக விடுக்கப்பட்ட அநீதி என இவர்கள் கூறுகின்றனர். தம்மால் முதுநிலைப் பதவிகளை வகிக்க முடியாதுள்ளதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளையில், பதவியிலுள்ள நான்கு மேஜர் ஜெனரல்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவர் போன்றோர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் சந்திப்பை மேற்கொண்டமை தொடர்பாக இராணுவப் புலனாய்வு அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர்அதிகாரிகள், ஏனைய அரச நிறுவனங்கள் போன்றவற்றுடன் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு முன்னர் இராணுவத் தளபதியின் அனுமதி பெறப்பட வேண்டும் என இராணுவ சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறானதொரு சந்திப்பும் இடம்பெறவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த அதிகாரிகளால் அச்சுறுத்தப்படுபவர்களாலேயே இவ்வாறானதொரு கட்டுக்கதை உருவாக்கப்பட்டதாகவும் ‘த சண்டே லீடரிடம்’ குறித்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

‘தாங்கள் இராணுவத் தளபதியாக வருவதற்கான வாய்ப்பை இதன்மூலம் இழந்து விடுவோமோ என இவர்கள் அச்சங் கொள்கின்றனர்’ எனவும் குறித்த அதிகாரி தெரிவித்தார். போரின் போது முக்கிய பங்காற்றியிருந்த சில மூத்த இராணுவ அதிகாரிகள் சாதாரணமாக ஓய்வு வழங்கப்பட்டமையே இவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசாகும். இராணுவம் மற்றும் இந்த நாடு முழுவதற்கும் சேவையாற்றிய போதிலும் தமது பங்களிப்புக்களை எவரும் வெளிப்படுத்தவோ அல்லது பாராட்டாவோ முன்வரவில்லை என இந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமது பதவிக்காலத்தை மேலும் அதிகரிக்குமாறு மேஜர் ஜெனரல்கள் அடங்கிய குழுவொன்று நாட்டின் அதிபரைச் சந்தித்து கோரியதாகக் கூறப்படுவது பொய்யென இவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும், போரின் போது பங்காற்றிய மேஜர் ஜெனரல்கள் அடங்கிய குழுவொன்று சீதுவையிலுள்ள ஒன்றிச் விடுதியில் சிறிலங்கா அதிபருடன் மதிய உணவை உண்டனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலராலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா அதிபரைச் சந்திப்பதற்கு முன்னர் அனைத்து மேஜர் ஜெனரல்களும் இராணுவத் தளபதியிடம் அனுமதி பெற்றிருந்தனர். ‘நாங்கள் அதிபரைச் சந்தித்த போது எமது பதவிக்காலத்தை அதிகரிக்குமாறு கோரவில்லை. ஆனால் அதிபர் எம்மிடம் கருத்துக்களைப் பகிருமாறு கோரிய போது, ஜெனீவாவில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் தற்போது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் சந்திக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினோம். எம்மீது பல்வேறு அவதூறுகள் இடப்படுவதாகவும் கூறினோம். இதனால் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்தும் பணியாற்ற அச்சப்படுகின்றனர் எனவும் அதிபரிடம் கூறினோம்’ என குறித்த அதிகாரி தெரிவித்தார்.

இராணுவத் தளபதியைத் தொடர்புகொண்டு அவரது பதவிக்கால நீட்டிப்புத் தொடர்பாக வினவியபோது தனக்கும் அதுபற்றித் தெரியாது என அவர் தெரிவித்தார்.

எனினும், தற்போதைய இராணுவத் தளபதி சேவை நீடிப்புச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக உள்ளக இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தனது பதவிக்காலத்தில், இராணுவத்திற்குள் அரசியல் செல்வாக்குச் செலுத்த அனுமதியாது வெளிப்படையான உறுதிமிக்க ஒரு இராணுவ அதிகாரியாகச் செயற்பட்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில்  – Camelia Nathaniel
வழிமூலம்        – The sunday leader
மொழியாக்கம்  – நித்தியபாரதி