சிதம்பராகல்லூரி முன் வளாகத்தில் கம்பீரமாக நின்ற பழமையான மரங்கள் திடீரென வெட்டப்பட்டது புலம்பெயர் மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மரங்களை வெட்டுவது பாடசாலை சூழலையும் இயற்கையை பாதிக்கும் என்று பாடசாலை அபிவிருத்தி சங்கம் (SDC) கடந்த கார்த்திகை மாதம் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும் வல்வெட்டித்துறை சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்க தலைவரும் கொழும்பு சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளரும் மார்கழி மாதம் விடுமுறை நாட்களில் ஓரிரு பெற்றோருடன் ஒரு கூட்டத்தை நடாத்தி இந்த மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.
‘மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்ற வாசகத்திற்கு உயிர் கொடுக்க வேண்டிய பாடசாலையில் மரங்கள் வெட்டப்பட்டதற்கு இந்திய வாழ் வல்வை மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மரம் வெட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக 5 புதிய மண்சார்ந்த மரக்கன்றுகளை பாடசாலை வளாகத்தில் நட்டு, பராமரிக்க வேண்டும்.
மரம் வெட்டும் பணி அதிகாரிகள் முன்னிலையில்தான் நடைபெற வேண்டும். இதனை கண்காணிக்க வேண்டிய பிரதேச செயலக அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சட்ட விரோதமாக மரம் வெட்டும் இச்செயலை, அதற்கு துணை நின்ற கல்வி அதிகாரிகளை இந்திய வாழ் வல்வை மக்கள் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய வாழ் வல்வை மக்கள்