சலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிவிபத்து தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் மூன்று இளநிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளநிலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதாக, இராணுவத் தளத்துக்குள் பதற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மூத்த அதிகாரிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அதேவேளை, மேஜர் உள்ளிட்ட ஐந்து இளநிலை அதிகாரிகளுக்கு எதிராக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 05ஆம் நாள் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில், பெரும் எண்ணிக்கையான ஆயுதங்கள் அழிந்ததுடன், இராணுவத் தளமும் அருகில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளும் முற்றாக அழிந்து போனமை குறிப்பிடத்தக்கது.