சலாவ இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக வெளியான செய்திகளை, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சலாவ முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், பாகிஸ்தானுக்கு விற்கத் திட்டமிடப்பட்டிருந்தா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, ‘சிறிலங்கா அரசாங்கத்திடம் அத்தகைய திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை. அவ்வாறு எதையாவது செய்வதானால், அதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும்.
அமைச்சரவைக்குத் தெரியாமல், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதானால், அது முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மட்டும் தான் சாத்தியமாகும்.” என்று தெரிவித்தார்.
அதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர,
‘சலாவ சம்பவத்தினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. இது இராணுவத்தின் பலத்தையோ, நாட்டின் இராணுவ வலிமையையோ பாதிக்காது.
சலாவ இராணுவ முகாம் குறைந்த சன அடர்த்தி கொண்ட பகுதிக்கு மாற்றப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இராணுவ முகாம்களில் வெடிவிபத்து ஏற்படுவது ஏனைய நாடுகளிலும் கூட வழக்கமானது. இராணுவ முகாம்கள் மிக கவனமாக பராமரிக்கப்படுகின்றன.
எனினும், சிறிய தவறு, இதுபோன்ற பாரிய வெடிப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.” என்று தெரிவித்தார்.