சம்பூரில் நடந்த சர்ச்கைக்குரிய நிகழ்வு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுக்கும் வரை, அதுபற்றி எந்தக் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கடுமையாகத் திட்டிய விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர், கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா கடற்படை ஏற்கனவே இதுபற்றிய அறிக்கை ஒன்றை சிறிலங்கா பிரதமரிடம் கையளித்துள்ளது.
தற்போது ஜி7 மாநாட்டுக்காக ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், கடற்படையினதும், கிழக்கு மாகாண முதலமைச்சரினதும் அறிக்கைகளை, சிறிலங்கா பிரதமர் கையளிக்கவுள்ளார்.
இந்த நிலையிலேயே, சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் பொருத்தமான முடிவு ஒன்றை எடுக்கும் வரை, இது தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு, கடற்படையையும், கிழக்கு முதல்வரையும் சிறிலங்கா பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விடயத்தில் இறுதி முடிவு சிறிலங்கா அதிபர் நாடு திரும்பிய பின்னரே எடுக்கப்படும் என்றும் அவர் இரண்டு தரப்பினரிடமும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவிடம், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை நடத்தியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.