இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த, நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹட்ரெம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இருதரப்பு பேச்சுக்களை நடத்துவதற்காகவும், சிறிலங்கா- நோர்வே இடையே வர்த்தக ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்காகவும், ரோர் ஹட்ரெம் நேற்றுக்காலை சிறிலங்கா வந்தார்.
அவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதுடன், சிறிலங்கா அரசாங்கத் தரப்பினரையும் சந்தித்தார்.
இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ள ரோர் ஹட்ரெம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியில், ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஊடாக, நோர்வேயின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.