சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முடிவு ஒன்றை எடுப்பார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில், “ஜப்பானில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்தரிபால சிறிசேன இன்று தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் தலைவருடன் தொடர்பு கொண்டு தமது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு நீடிப்பதால், பல்வேறு தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கவலை தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் பொரிய தொழிற்துறைகளில் இந்த தடை தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி தாம், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் தலைவருடன் தனிப்பட்ட முறையில் பேசியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதுபற்றி கூடிய விரைவில் முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுப்பாட்டினால், 27 ஆயிரம் இணையவழி வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்று தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, “முகநூல், வைபர், வட்ஸ்அப், ஐஎம்ஓ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாடுகள் பெரும்பாலும் அடுத்த 24 மணிநேரத்துக்குள் நீக்கப்படும்” என்று கூறினார்.
சமூக ஊடகத் தகவல்களை வடிகட்டுவது தொடர்பாக முகநூல் சேவை வழங்குனருடன் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு பேச்சு நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.