கொழும்புக்குக் கிழக்காக, 36 கி.மீ தொலைவில் உள்ள கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுமாலை 5.47 மணியளவில், முதலாவது குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதையடுத்து, ஆயுதக் கிடங்கு ஒன்று தீப்பற்றிய எரியத் தொடங்கியது.
அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதால், அருகில் இருந்த மற்றொரு ஆயுதக் கிடங்கிலும் வெடிவிபத்து ஏற்பட்டது.
இங்கு கனரக ஆயுதங்களுக்கான வெடிபொருள்களே அதிகளவில் சேமிக்கப்பட்டிருந்ததால், பாதிப்பும் இழப்புகளும் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள மிகப் பெரிய ஆயுதக் கிடங்குகளில், சலாவ முகாம் ஆயுதக் கிடங்கும் ஒன்றாகும்.
இந்த விபத்தை அடுத்து, ஏற்பட்ட தீணை அணைப்பதற்கு, தீயணைப்புப் படையினரால் நெருங்கவே முடியாதிருந்தது. இதனால், தீ தானாகவே அணையும் வரை அவர்கள் காத்திருக்க நேரிட்டது.
இந்த வெடிவிபத்தினால் ஏற்பட்ட நி்லைமைகளை தரையில் இருந்து கண்காணிக்க முடியாததால், சிறிலங்கா விமானப்படையின் ஒரு ஆளில்லா வேவு விமானம் மற்றும் பி-200 பீச்கிராப்ட் கண்காணிப்பு விமானம் ஆகியன தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.