வடக்கில் முன்னரும் குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்ததாகவும், ஆனால் போர்க்காலத்தில் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும், தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கில் குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெறுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்துக் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண ஆளுனர், “முன்னரும், வடக்கில் குற்றச்செயல்கள் இடம்பெற்றன. போரினால், ஊடகங்களில் அப்போது அதுபற்றிய செய்திகள் வெளியாவதில்லை.
இப்போது அங்கு சுதந்திரம் உள்ளது. அதிகளவு ஊடக வாய்ப்புகள் உள்ளன. இதனால், பரவலாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
ஒவ்வொரு நாளும் பெருமளவு கேரள கஞ்சா வடக்கில் கைப்பற்றப்படுகிறது. ஆனால் இதுபற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அண்மைக்காலமாக குற்றச்செயல்களும், சமூக வன்முறைகளும் அதிகரித்திருக்கின்ற நிலையில், இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, யாழ். ஆயர் தலைமையிலான சமூக அக்கறை கொண்டவர்களின் குழுவொன்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே, வடக்கு மாகாண ஆளுனர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.