இன்று(17/07/2016) வெளியாகிய தமிழக அரசியல் வார இதழில் பிரசுரமாகியிருக்கும் ‘உஷ்… நெருப்புடா!’கார்க்கோடன் கட்டுரை மிகவும் அபத்தமாக உள்ளது.
கபாலி மட்டுமல்ல பெரும்பாலான திரைப்படங்களின் அடிநாதமே பணம்தான். பணத்தை போட்டு பணத்தை எடுக்கும் சூதாட்டத்திற்கு ஒப்பான தமிழ் சினிமாவின் இழிநிலையை வெள்ளையடிக்கும் முயற்சியாக கபாலிக்கு பட்டாபிசேகம் செய்துள்ளீர்கள்.
ஆகா.. ஓகோ.. என்று பரபரப்பாக்கப்பட்டு வரும் கபாலி தொடர்பான அத்தனை விடயங்களும் தயாரிப்பு தரப்பின் தூண்டுதலின் பேரிலும் வியாபார நோக்கிலும் நடைபெற்றுவருபவை என்பது பாமரனுக்கே தெரிந்துள்ள நிலையில் கபாலி படம் வெற்றிபெற்று சாதனை படைப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழினத்திற்கும் பெருமைதான் என்று குறிப்பிட்டுள்ளமை மகா அபத்தமாகும்.
எல்லாம் வியாபார மயமாகிய இன்றைய சூழ்நிலையில் பணத்தை மையமாக வைத்து நடக்கும் இந்த சூதாட்டத்திற்கு இனத்தின் பெருமையென்று பட்டாபிசேகம் செய்யும் உங்கள் முயற்சியிலும் அந்த பணம் பின்னணியில் இல்லை என்று நம்புகிறேன்.
ரஜனி ரசிகனின் படைப்பாகவே இந்த கட்டுரை அமைந்துள்ளது.
உலகத்தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக காலம் உள்ளவரை நிலைபெற்று நிற்பது தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேராற்றல்களும் தான். இதனை யார் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் காலம் நிச்சயம் உறுதிசெய்யும்.
இனவிடுதலை என்ற ஒற்றை இலட்சியத்திற்காக ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மானமறவர்கள் தமது உயிரையே கொடையாக கொடுத்து படைத்துள்ள தமிழீழ விடுதலை போராட்டமே உலகத் தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகும்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வழித்தடங்களே உலகத் தமிழர்களின் வரலாற்றின் வழித்தடங்களாகும்.
பல நூற்றாண்டுகளாக புராண இதிகாசங்களிலும் வரலாற்று நூல்களிலும் முந்தை தமிழரின் வீரத்தை படித்தும் கேட்டு வந்த நிலையில் சமகாலத்தில் எம் நினைவுப்புலத்தின் சாட்சியாக ஈழ மண்ணில் நடந்தேறிக்கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டம் உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றையே புரட்டிப்போட்டுள்ள நிலையில் காகித கத்தியில் சண்டைபோடும் இவர்களையும் இவர்களின் படங்களையும் உலகத் தமிழர்களின் அடையாளமாக நிறுவும் உங்கள் செயலை என்னவென்று சொல்ல…?
கபாலி திரைப்படத்திற்கு நான்குபக்கங்களில் பட்டாபிசேகம் நடத்திய கார்க்கோடன் ‘ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொலையான போதும் தமிழச்சிகளின் மானம் பகிரங்கமாக பறிபோனபோதும் ஒன்றுபடாத உலகத் தமிழினம் கபாலி வெளியீட்டில் ஒன்று படுகிறதோ என்று தோன்றுகிறது.’ என்று குறிப்பிட்டிருப்பது இப்படியான விமர்சனங்களில் இருந்து பாதுகாத்துகொள்ள செய்யப்பட்ட ‘முன்பிணை’யாகவே எண்ணத்தோன்றுகிறது.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
தமிழீழ தாகத்துடன்….
இரா.மயூதரன்.