வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காங்கேசன்துறையில் இருந்து மாத்தறைக்கு “மனிதாபிமான தொடருந்து” இன்று பயணமாகவுள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இந்த மனிதாபிமான தொடருந்து, புறப்படும்.
சிறிலங்கா அதிபர் செயலகமும், தொடருந்து திணைக்களமும் இணைந்து, இந்த சிறப்பு தொடருந்துப் பயணத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளன.
காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அனுராதபுர, மாகோ, கணெவத்த, குருநாகல, பொல்கஹவெல, அளவ்வ, அம்பேபுஸ்ஸ, மீரிகம,வியாங்கொட, கம்பகா, கணேமுல்ல, ராகம, ஹுணுப்பிட்டிய, களனி, தெமட்டகொட, மருதானை, கோட்டை, தெகிவளை, மொரட்டுவ, பாணந்துறை ஆகிய தொடருந்து நிலையங்களில் இந்த சிறப்பு தொடருந்து தரித்துச் செல்லும்.
இதன்போது, இந்த தொடருந்து நிலையங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள உதவிப் பொருட்கள் மனிதாபிமான தொடருந்தில் ஏற்றப்படும்.
சமையலறைப் பொருட்கள், சுத்திகரிப்பு கருவிகள், உலர் உணவு, பாடசாலை மாணவர்கள், பெரியவர்களுக்கான உடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துவாய்கள், பெண்களுக்கான சுகாதார பொருட்கள், நுளம்புவலைகள், தொற்றுநீக்கிகள், சர்க்காரம், பாடசாலை எழுதுபொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், நூல்கள் என்பன தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதாபிமான தொடருந்து பயணம் மூலம் சேகரிக்கப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும்.