கப்பலில் வரும் திருவள்ளுவர் சிலைகளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் நிறுவ ஏற்பாடு
சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.75 அடி உயரமான பீடத்தில் அமர்ந்தபடி உள்ள 6.5 அடி உயரமான இந்த திருவள்ளுவர் சிலைகள், கண்ணாடியிழையினால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை சென்னையில் இருந்து கப்பல் மூலம் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்படுகின்றன.
சாவகச்சேரி, கிளிநொச்சி, மன்னார், புளியங்குளம், திருகோணமலை, புத்தளம், கல்முனை உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்தச் சிலை நிறுவப்படும்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனரான தொழிலதிபர் விஜிபி சந்தோசம் இந்த சிலைகளை நேற்றுமுன்தினம் சென்னையில் உள்ள சிறிலங்கா உதவித் தூதுவரிடம் அன்பளிப்புச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.