Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » கடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன?

கடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன?

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில்  இவர்  ‘ஏடன் வளைகுடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாத்தல்’ என்பது எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

கடற்கொள்ளையர்களிடமிருந்து வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பதே சிறிலங்கா கடற்படைத் தளபதிகளின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி தனது தனிப்பட்ட தீர்மானத்தையோ அல்லது அபிப்பிராயத்தையோ வெளிப்படுத்தவில்லை என்பது வெளிப்படையானதாகும். இவர் தனது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதையே தனது ஊடக அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருகோணமலையில் இடம்பெற்ற கடற்படை வீரர்களுக்கான ஒன்றுகூடலில் தெரிவித்த கருத்தையே தற்போது ட்ராவிஸ் சின்னையாவும் எதிரொலித்துள்ளார்.

சிறிலங்காவின் கடற்பிரதேசங்களை மட்டுமல்லாது இந்திய மற்றும் பசுபிக் மாக்கடல் பிரதேசங்களை அதாவது ‘மாலைதீவிலிருந்து மலாக்கா நீரிணை’ வரையான கடற் பிரதேசங்களை சிறிலங்கா கடற்படையினர் பாதுகாக்க வேண்டும் எனவும் இந்த நோக்கத்திற்காக கடற்படையினர் தயார்ப்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த நோக்கத்திற்காக  சிறிலங்கா மேலும் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

சிறிலங்காவானது இப்புதிய பங்களிப்பை மேற்கொள்வதை நோக்காகக் கொண்டிருக்குமானால், இப்பிராந்தியத்தில் உள்ள அதிகாரத்துவ நாடுகள் இதில் தலையீடு செய்வதற்கு முற்படும். அத்துடன் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பிலும் தீவிர கரிசனை காண்பிக்கப்படும்.

இந்நிலையில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவும் மூலோபாய ரீதியான உணர்ச்சி மிக்க முக்கோண உறவிற்குள் சிறிலங்காவும் இணைந்து கொள்ள வேண்டிய நிலையேற்படும்.

sri lanka navy

இந்திய மாக்கடலில் சீனாவின் கடல் சார் பிரசன்னமானது அதிகரித்துள்ளதாலும் குறிப்பாக ஒரு பாதை ஒரு அணை என்கின்ற தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சீனாவால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் மீதான இந்தியாவின் சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டொக்லம் பீடபூமியில் தத்தமது இருப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசியாவின் பாரிய இரு சக்தி வாய்ந்த நாடுகளும் அணுவாயுத சக்தி மிக்க நாடுகளுமான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல்நிலை மேலும் தீவிரம் பெற்றுள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் பாரிய வர்த்தக சார் உறவுகள் இருப்பினும் கூட தத்தமது இருப்பைப் பலப்படுத்துவதற்காக இவ்விரு நாடுகளும் மோதலில் ஈடுபடுகின்றன.

இந்திய மாக்கடலில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கடல் சார் பலப்படுத்தல்கள் சீனாவை விட அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்கு முரணாக சீனா மற்றும் இந்தியா ஆகியன இவ்விரு நாடுகளின் இராணுவம் தொடர்பாக அச்சம் கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. சீனா தனது முத்துமாலை மூலோபயத்தின் மூலம் சிறிலங்கா, மியான்மார், பங்களாதேஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் துறைமுகங்களை நிர்மாணித்தும் அபிவிருத்தி செய்தும் வருவதன் மூலம் தனது இருப்பைப் பலப்படுத்துவதாக அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் சீனா இந்த நகர்வின் மூலம் இந்தியாவைச் சூழ்ந்து கொள்வதுடன் இதனைத் தனது இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதேபோன்று சீன ஆய்வாளர்களும் தமது நாட்டை இந்தியா முற்றுகையிடலாம் என அச்சம் கொள்வதாகவும் குறிப்பாக மலாக்கா நீரிணைக்கு அருகிலுள்ள இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இராணுவ ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை அச்சத்தைத் தருவதாகவும் சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் 40 சதவீத வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் இந்திய மாக்கடலின் கடல் பாதைகளிலேயே தங்கியுள்ளது. சீனா தனக்குத் தேவையான பெற்றோலியத்தில் 80 சதவீதத்திற்கும் மேல் மலாக்கா நீரிணையின் ஊடாகவே இறக்குமதி செய்கிறது. ஆகவே முக்கிய கடல்வழிப் பாதைகளை வேறு நாடுகள் கைப்பற்றி விடுமோ என சீனா நீண்ட காலமாக அச்சமடைந்து வருகிறது.

இதற்குச் சான்றாக அமெரிக்க இராணுவத்தினர் தென்சீனக் கடலில் மோதல்களை ஏற்படுத்துவதற்காக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தமது தளத்தை நிர்மாணித்துள்ளனர். சீனாவின் பிராந்தியத்தில் அமெரிக்காவானது அணுவாயுதங்களுடன் சுற்றிவளைப்பதானது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் என சில ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

srilanka navy marrines (1)

கடல்சார் பிரசன்னத்தை சீனா விரிவுபடுத்துவதற்கு வர்த்தக நோக்கமே காரணம் எனவும் இதில் எவ்வித இராணுவ நோக்கமும் இல்லை எனவும் சீன ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இருப்பினும் சீனா தனது முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளத்தை டிஜிபோட்டியில் நிர்மாணித்தமையானாது சீனா தனது இராணுவ நோக்கத்தை விரிவுபடுத்தவுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

யப்பான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்றனவும் டிஜிபோட்டியில் இராணுவத் தளங்களை அமைத்துள்ள போதிலும் சீனாவின் இராணுவத் தளம் தொடர்பாகவே அதிகம் பேசப்படுகிறது. சீனா தற்போது அமைத்துள்ள ஒரு இராணுவத் தளத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்கா ஏற்கனவே வெளிநாடுகளில் 800 இராணுவத் தளங்களை அமைத்துள்ளது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது என 2015ல் டேவிட் வைனின் பத்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. (தற்போது அமெரிக்காவின் இராணுவத் தளங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம்)

‘வரலாற்றிலேயே ஏனைய நாடுகளோ மக்களோ அல்லது பேரரசுகளோ கொண்டிராத வகையில் வெளிநாடுகளில் அமெரிக்காவானது பெரும் எண்ணிக்கையான இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது’ என வைன் தனது பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தார்.

‘இந்திய மாக்கடலின் கரையோர நாடுகளில் சீனா வர்த்தக நோக்கங்களுக்காக துறைமுக வசதிகளை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் இவற்றை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் என அமெரிக்க மற்றும் இந்திய வல்லுனர்கள் விவாதிக்கின்றனர்’ என ஜோர்ஜ் வோசிங்ரன் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக விவகாரங்கள் தொடர்பான எலியோற் பாடசாலையின் பேராசிரியரான டேவிட் சின் தான் எழுதிய ‘சீனாவின் அதிகாரத்துவத் திட்டங்கள்’ என்கின்ற பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

‘மேற்கு இந்திய மாக்கடலில் சீனா தனது கடற்படைப் பலத்தை விரிவுபடுத்தும் அதேவேளையில், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படையானது சீனாவின் கரையோரப் பகுதி, தென்சீனக் கடல், மலாக்கா நீரிணை மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியங்களில் தனது இருப்பைப் பலப்படுத்துவதிலேயே முன்னுரிமை அளிக்கின்றது’ என டேவிட் சின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென் சீனக் கடலில் உள்ள தீவுகளில் சீனா தனது இராணுவ ஏற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இதனால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்பாற்லி தீவுகளில் சீனாவால் விமான ஓடுதளங்கள் கட்டப்பட்டுள்ளமை பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வோசிங்ரன் பிலிப்பீன்ஸ் மீது அழுத்தம் கொடுக்கும் வரையும் பென்ரகனால் ‘சுதந்திரமான கடல் போக்குவரத்து’ என்கின்ற தலைப்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் வரை ‘முன்னுரிமையற்ற முரண்பாடாகக்’ காணப்பட்டது என இந்தியாவின் Defence News ஊடகம்  செய்தி வெளியிட்டிருந்தது.

ms-trinco-navy-parade (3)

‘உண்மையில் இதன் கருத்து என்ன? அமெரிக்கப் போர்க் கப்பல்கள் சுதந்திரமாக ரோந்தில் ஈடுபடுவதற்கும் சீனாவின் கரையோரத்தை அதிகாரம் செய்வதையுமே பென்டகனின் பரப்புரை கூறுகிறது. கலிபோர்னியாவின் கரையோரத்தில் சீனப் போர்க் கப்பல்கள் இதே நடவடிக்கையை மேற்கொண்டால் அமெரிக்காவின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்’ என Defence News ஊடகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘சீனா ஏன் தென்சீனக் கடலில் விமான ஓடுதளங்களைக் கட்டுகின்றது? இதற்கான பதில் தெளிவாகத் தெரிகின்றது. இராணுவத் தளங்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், படைவீரர்கள், அணுவாயுததாரிகள் போன்றவற்றின் வலைப்பின்னலுடன் அமெரிக்கா, சீனாவைச் சூழ்கின்றது’ என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு பதற்றம் நிறைந்த இடத்திற்கு சிறிலங்கா எந்த அடிப்படையில் ஏடன் வளைகுடா தொடக்கம் மலாக்கா நீரிணை வரையான கடற்பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு விரைகிறது என எவரும் கேள்வி கேட்கலாம்.

தவிர,  ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலானது அனைத்துலக நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் தற்போது கணிசமானளவிற்குக் குறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாண்டு மார்ச் மாதம் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கப்பலொன்று கடத்தப்பட்ட சம்பவம் தவிர, இறுதியாக 2012 இலேயே கடற்கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றன.

நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை வெற்றிகொள்வதற்கு சிறிலங்கா கடற்படையினரும் கணிசமானளவு பங்களிப்பை வழங்கினர் என்கின்ற அடையாளத்தைக் கொண்டுள்ள அதேவேளையில், அணுவாயுத சக்தி மிக்க நாடுகளின் கடற்படையினருக்குச் சமமாக இருப்பதாக பாசாங்கு செய்யத் தேவையில்லை.

சிறிலங்கா கடற்படையானது அனைத்துலக கடலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், சக்தி மிக்க நாடுகளின் கடற்படையினருக்கு உதவும் இளநிலைப் பங்காளியாகவே செயற்பட வேண்டும். பாரிய மோதல் நிலவும் போது, பூகோள அரசியல் சூழல் காரணமாக சிறிலங்கா விலகி நிற்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும். இவ்வாறான ஒரு சம்பவத்தின் போது ‘அனைத்து நாடுகளுடனும் நட்புப் பேணுதலும், எந்தவொரு நாட்டையும் பகைப்பதில்லை’ என்கின்ற சிறிலங்காவின் நிலைப்பாடு முடிவிற்குக் கொண்டுவரப்படும்.

இவ்வாறான தவறான எண்ணத்தின் அடிப்படையில் சிறிலங்கா, ஏடன் வளைகுடா தொடக்கம் மலாக்கா நீரிணை வரையான கடல் வழிப்பாதைகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்காவிற்கு ஆதரவளிக்குமாயின் சிறிலங்காவானது சாத்தானுக்கும் ஆழமான நீலக்கடலிற்கும் இடையில் அகப்பட்டு அழிந்து விடுமா?

வழிமூலம்       – daily mirror
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *