சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி ஜி.பார்த்தசாரதி புதுடெல்லியில் இருந்து வெளியாகும், TheTribune நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.
உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் மீள்கட்டுமாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் நான் சிறிலங்காவிற்குச் சென்ற போது அது மிகவும் ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவமாக இருந்தது.
இந்திய இராணுவக் கட்டளைத் தளபதி லெப்.ஜெனரல் திபெந்தர் சிங்குடன் 1987 ஒக்ரோபரில் நான் முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்திருந்தேன். எமது உலங்குவானூர்தி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய போது கேட்ட ஏ.கே-47 ரக துப்பாக்கிச் சூட்டின் சத்தமானது இன்றும் என் நினைவில் பதிந்துள்ளது.
நான் தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலி விமானநிலையத்தில் தரையிறங்கிய போது இந்த நிலைமை மிகவும் மாறுபட்டிருந்தது. போரின் வடுக்கள் ஆறுவதற்கு இன்னமும் பல பத்தாண்டுகள் எடுக்கும் அதேவேளையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள மாற்றங்களானது அனைவரையும் அதன்பால் ஈர்க்கும் என்பதே உண்மை.
யாழ்ப்பாணமானது தற்போது மிகவும் சுறுசுறுப்பான ஒரு நகரமாக மாறியுள்ளது. மாணவர்கள் தமது ஈருருளிகளில் பாடசாலைகளுக்குச் செல்வதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிறப்பான மாற்றங்களையும் அவதானிக்க முடிந்தது. மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மிகவும் சீராகக் காணப்படுவதுடன், புதிய விடுதியானது விருந்தினர்களால் நிறைந்திருந்தது. இந்தியாவால் வழங்கப்படும் முழுமையான புனர்வாழ்வு உதவித் திட்டத்தைக் கண்காணிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது.
சிறிலங்காவிற்கான குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான இந்தியாவின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் பெரியளவில் வெளியிடப்படவில்லை. போரால் பாதிக்கப்பட்ட 46,000 தமிழ்க் குடும்பங்களுக்கு இந்தியா வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. இதற்கும் அப்பால், வடக்கு மாகாணம் முழுவதற்கும் சிறு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கும் யாழ்ப்பாணத்தின் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கும் இந்தியா உதவிவருகிறது. வைத்தியசாலைகளை நிர்மாணித்தலும், அவற்றுக்கான உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தலும், நீர் வழங்கல் திட்டங்கள் போன்றவற்றையும் இந்தியா மேற்கொள்கிறது.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மீனவர்களுக்குப் படகுகள், மீன்பிடி வலைகள், குளிர்பதனிடு உபகரணங்கள் போன்றவற்றையும் இந்தியா வழங்கியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி ரோலர்கள் தமது மீன்வளத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக யாழ்ப்பாணத்து மீனவர்கள் ஆத்திரப்படுவதில் எவ்வித இரகசியமும் இல்லை. இந்திய மீன்பிடி ரோலர்கள் தமது கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என யாழ் குடாநாட்டு மக்கள் தெரிவித்தனர். இது உண்மையில் ஒரு மனிதாபிமான விவகாரமாகும். இந்த விடயத்தில் தமிழ்நாட்டிலுள்ள தமது சகோதரர்கள் புரிந்துணர்வுடனும் ஆதரவுடனும் செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானநிலையம் போன்றன மேலும் விரிவுபடுத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக பாக்கு நீரிணையில் சுற்றுலாத்துறை மையம் ஒன்றை உருவாக்குவதற்கான பொருத்தமான இடமாக பலாலி விமானநிலையத்தை இந்தியா மாற்றுவதற்கான சாத்தியம் உள்ளது. இதற்கும் அப்பால், இந்தியாவின் உதவியுடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான தொடருந்துப் பாதைகள் மிக விரைவாகவும் முழுமையாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியானதொரு விடயமாகும்.
கிழக்கு மாகாணத்தில் சம்பூர் அனல் மின்நிலையம் உருவாக்கப்படுவதில் நீண்டகாலமாக இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்நிலையில், திருகோணமலையை பிராந்திய மையமாக மாற்றுவதில் இந்தியா எவ்வாறு உதவமுடியும் எனப் பலர் சிந்திக்கின்றனர். ஆனாலும் மூலோபாய முக்கியத்துவம் மிக்க திருகோணமலைத் துறைமுகத்தின் பெற்றோலிய சேமிப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதில் இந்தியா ஆர்வத்துடன் உள்ளது.
பெற்றோலிய அமைச்சர் திரு.தர்மேந்திரா பிரதன் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவரது நிகழச்சி நிரலில் திருகோணமலைத் துறைமுகத்தில் பெற்றோலிய சேமிப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பான பேச்சுக்கள் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் இதன் முதலமைச்சராக பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். மாகாண அரசாங்கத்திற்கு மேலும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் எனப் பல்வேறு முறைப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு அரசியல் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாக்குறுதிகளை வழங்கியுள்ள அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் இது நிறைவுசெய்யவேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்ற போதிலும் இன்னமும் இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தீர்வை எட்டவில்லை. கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் கருத்து வாக்கெடுப்புக்களை மேற்கொள்வதன் மூலம் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பான தீர்வை எட்ட முடியும்.
இதேவேளையில், சிறிலங்காவில் பாரியதொரு அரசியல் யாப்பு மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. கடந்த காலத்தில் ஏற்பட்ட இனப் புறக்கணிப்பிற்கு வழிவகுத்த பல்வேறு விடயங்கள் சிறிலங்காவின் புதிய அரசியல் யாப்பில் இடம்பெறும் என்கின்ற நம்பிக்கை காணப்படுகிறது.
தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் சிறிசேன – விக்கிரமசிங்கவின் ஐ.தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி போன்றன ஒன்றிணைந்துள்ளன. ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின் விளைவாக அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனாலேயே இவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கூட்டு அரசாங்கமானது அடுத்த தேர்தலிலும் இணைந்து போட்டியிட வேண்டுமா என்பது தெளிவில்லை.
ஆனால், சிறிலங்கா மீதான சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் இந்தியா சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது அறிவற்ற செயல் என்றாலும் கூட, இதன்மூலம் ஏற்படக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகளை இந்தியா கண்காணிக்க வேண்டியுள்ளது. இதேவேளையில், சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீன- பாகிஸ்தானிய ஜே.எப் – 17 போர் விமானத்தைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா தயக்கம் காண்பிக்கின்றது. இதற்குப் பதிலாக இந்தியாவின் இலகு ரக போர் விமானத்தைக் கொள்வனவு செய்வதற்கான தயார்ப்படுத்தலை இந்தியா மேற்கொள்கிறது.
சிறிலங்காவுடனான இந்தியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியா தற்போது சிறிலங்காவின் மிகப்பாரிய வர்த்தகப் பங்காளியாக செயற்படுகிறது. முதலீட்டுத் தொடர்புகளும் அதிகரிக்கின்றன. குறிப்பாக வர்த்தகம், பெற்றோலியம் மற்றும் இராசாயனம், ரயர்கள், சீமெந்து, கட்டுமாணம் போன்றவற்றில் இந்தியாவுடனான சிறிலங்காவின் தொடர்புகள் வலுத்து வருகின்றன.
சீனி சுத்திகரிப்பு ஆலைகள் போன்றவற்றை நிறுவுவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவின் பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். புத்தபிக்குக்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாது பூட்டான், மியான்மார் மற்றும் தாய்லாந்து போன்ற வங்களா விரிகுடாவின் எல்லை நாடுகளுடன் ஆன்மீக வழக்காறுகளைப் பகிர்ந்து கொள்வதிலும் இந்தியா நாட்டங் காட்ட வேண்டும்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் புதுடில்லியில் BIMSTEC உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஸ், மியான்மார் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் பௌத்த மரபுகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இப்பிராந்தியத்தை சுற்றுலாத்துறை மையமாக உருவாக்குவதற்காகவும் இதன்மூலம் உலகெங்கும் வாழும் 535 மில்லியன் பௌத்தர்களை இதன்பால் ஈர்த்துக் கொள்ள முடியும்.
மதசார் சுற்றுலாத்துறை என்பது தற்போது உலகெங்கும் பிரபலம் பெற்றுவருகிறது. சீனாவில் மட்டும் 250 மில்லியன் மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இந்தியா தனது கிழக்கு அயல்நாடுகளுடன் ஒப்பிடும் போது தன்னை அனைத்துலக ரீதியான ஒரு கவர்ச்சிமிக்க சுற்றுலாத்துறை மையமாக மாற்றுவதற்கு இன்னமும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பது மிகவும் வேதனைமிக்க விடயமாகும்.