கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், வெசாக் கொண்டாட்டங்களால் அந்தப் பயணம் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அமெரிக்காவுடன் இயல்பான உறவை பேணி வந்திருக்கிறது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம், அமெரிக்காவை மாத்திரமன்றி, முன்னர் சிறிலங்காவுடன் நெருக்கமாக இருந்த ஏனைய பல நாடுகளிடம் இருந்தும் தன்னைத் தானே விலக்கி வைத்திருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், உலகத்தை மீண்டும் திறந்து விட்டோம். கடந்த 20 மாதங்களில், அமெரிக்க- சிறிலங்கா உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, 40 ஆண்டுகளில் முதல் முறையாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். ஐ.நாவுக்கான அமெரிக்க துதுவர் சமந்தா பவரும் சிறிலங்கா வந்தார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏனைய மூத்த அதிகாரிகளான நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோரும் சிறிலங்காவுக்குப் பல தடவைகள் பயணங்களை மேற்கொண்டனர்.
பலருக்குத் தெரியாம ஒரு விடயத்தை கூறுகிறேன். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கூட கடந்த மே மாதம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள தயாராக இருந்தார். அவர் வந்திருந்தால், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயர் கிடைத்திருக்கும்.
ஆனால், துரதிஷ்டவசமாக அமெரிக்க அதிபரால் பரிந்துரைக்கப்பட்ட நாட்கள், சிறிலங்காவில் வெசாக் விடுமுறைக் காலமாக இருந்தது.சிறிலங்காவில் மிகப் பெரியளவில் வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் சூழலில், முக்கியமானதொருவரின் பயணம் இடம்பெறுவது சாத்தியமில்லை. அதனால் அரியதொரு வாய்ப்பை நாம் இழக்க நேரிட்டது.
அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடன் சிறிலங்கா இணைந்து பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்