சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
“இருநாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட சந்திப்புகள் மூலம், இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது.
1999ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பின்னர், சிறிலங்காவின் ஏற்றுமதி 13 மடங்கால் அதிகரித்துள்ளது.
இந்த உடன்பாட்டினால் யார் அதிகம் பயனடைந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
சிறிலங்காவும் இந்தியாவும் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. பாதுகாப்புப் பயிற்சிகளில் புதுடெல்லியில் மிகப்பெரிய பங்காளராக கொழும்பு இருக்கிறது.
சிறிலங்காவின் பாதுகாப்பு இந்தியாவின் நலனுடன் தொடர்புடையது.
எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல்தீர்வின் மூலம், சிறிலங்காவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்த அரசியல்தீர்வு அமைய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.