சிறிலங்காவின் அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று காலை நடந்த நிகழ்வில் அவர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உறுப்பினராக இணைந்தார்.
இந்த நிகழ்வில் ஐதேக உறுப்பினர் அட்டையை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.
இதையடுத்து, ஐதேகவின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த சரத் பொன்சேகா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதொல்வியடைந்தார்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன மரணமான போது, அவரது இடத்துக்கு ஐதேகவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார்.
அண்மையில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சரத் பொன்சேகா, தனது ஜனநாயக கட்சியைக் கலைத்து விட்டு இப்போது ஐதேகவில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.