சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி அறிவித்திருந்தது.
கண்டியில் வெடித்த வன்முறைகளை அடுத்து, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதை கூட்டு எதிரணி ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை சமர்ப்பிப்பதில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசிடம் இதுபற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
“ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் எப்போது முன்வைப்பது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு தமக்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாக ஐதேக அரசியல்வாதிகள் பலரும் கூறியுள்ளனர்.
இதனால் எப்போது இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது என்று தீர்மானிக்கப்படவில்லை.
இது வெற்றியளிக்க வேண்டும் என்பதால், பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கு சிறிது காலஅவகாசம் தேவைப்படுகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.