இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை, விரைவுபடுத்துவது தொடர்பாக புதுடெல்லியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை சிறிலங்கா அரசாங்கம், இந்தவாரம் இந்தியாவுக்கு அனுப்பவுள்ளது.
கொழும்பில் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியுள்ள சூழலில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளை விரைவாக செய்துகொள்வதற்கு சிறிலங்கா முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
எட்கா தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கு இந்த வாரம் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம புதுடெல்லி செல்லவுள்ளார். இந்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கு கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டு நாடுகளின் அரசியல் உயர்மட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இந்த உடன்பாட்டுக்கு சிறிலங்காவின் தொழிற்துறையினரும், துறைசார் நிபுணர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.