இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (எட்கா) சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இது சிறிலங்காவின் பொருளாதார நலன்களுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் அனைத்துலக உறவுகள் தொடர்பான இந்திய வல்லுனர்களின் சுயாதீனக் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவிலிருந்து புதுடில்லிக்குப் பயணமாகிய ஊடகவியலாளர் குழு ஒன்றுடனான சந்திப்பிலேயே இக்கருத்து வலியுறுத்தப்பட்டது.
இந்தியா- சிறிலங்கா இடையே, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் சிறிலங்காவில் இந்தியப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் மற்றும் சிறிலங்காவின் உள்ளுர் தொழிற்துறைகளை இந்தியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடும் என்கின்ற கருத்து தவறானது எனவும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறிலங்காவுடன் பொருளாதார மற்றும் தொழில்றுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் சிறிலங்காவின் உள்ளுர் தொழில் வாய்ப்புக்களுக்கு ஆபத்து ஏற்படும் மற்றும் இந்தியர்கள் சிறிலங்காவிற்குள் அதிகளவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்கின்ற கருத்துக்கள் பொய்யானவை என அனைத்துலக உறவுகள் தொடர்பான வல்லுனரும் புதுடில்லியிலுள்ள சுயாதீன அமைப்பான பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் ஆய்வுகளுக்கான நிறுவகத்தின் தற்போதைய இயக்குனர் நாயகமுமான ஜெயந்த் பிரசாத் தெரிவித்தார்.
‘இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையர்கள் அதிகளவு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்’ எனவும் ஜெயந்த் பிரசாத் குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கையை எதிர்த்து சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் ‘அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்டவை’ என சிறிலங்கா – இந்தியா உறவுகள் தொடர்பான வல்லுனரும் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் தென்னாசியக் கற்கைகளுக்கான அனைத்துலக உறவுகள் தொடர்பாக 40 ஆண்டுகளாக விரிவுரையாளராகப் பணியாற்றுபவருமான பேராசிரியர் எஸ்.டி.முனி தெரிவித்தார்.
சிறிலங்காவுடனான இந்த உடன்படிக்கையின் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவான மேலும் விரிவுபடுத்தப்படுவதோடு மட்டுமல்லாது, இந்தியாவின் புதிய தொழினுட்ப நல்வாய்ப்புக்களுக்குள் சிறிலங்காவையும் உள்ளீர்த்துக் கொள்வதற்கும் உதவும் என பேராசிரியர் முனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்ற இரு தரப்பு உடன்படிக்கையை அமுல்படுத்துவதில் ஏற்படும் நன்மைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக பங்குதாரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சிறிலங்கா மற்றும் இந்திய அரசாங்கங்களை வல்லுனர் குழு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவிற்கான இந்தியாவின் முன்னாள் உயர் ஆணையாளர் என்.ஜா, ஆய்வாளர் ஜி.சுல்தானா மற்றும் அனைத்துலக உறவுகள் தொடர்பான உயர் மட்ட வல்லுனர் குழுவினரும் சிறிலங்க ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.