இறுதிப்போரில் வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகள் – ஒளிப்படங்களை வெளியிட்டது பிரித்தானிய ஊடகம்
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படைகளால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்கள், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கிடைத்திருப்பதாக, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் தி கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது.
2008- 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் நடந்த பகுதிகளில் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஒளிப்பட ஆதாரங்கள், முன்னாள் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கிடைத்துள்ளன.
பல்வேறு இடங்களில் கொத்தணிக் குண்டுகள் தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களை ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் வெளியிடடுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சாலை, புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளிலும், கிளிநொச்சியிலும் இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான தடயங்கள் மீட்கப்பட்ட இடங்களில், சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களும் அடங்கியுள்ளன.
அதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இருந்து 42 கொத்தணிக் குண்டுகளை 2011, 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாம் மீட்டதாக ஹலோ ட்ரட்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.