இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”போர்க்காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களில் இரசாயனப் பாதிப்பு இருந்தாக அறிக்கைகளில் தெரிவிக்கப்படவில்லை. போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கான சான்றுகள் ஏதும் இல்லை.
போரில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இறுதிக்கட்டப் போரில், அதுவும், இரண்டு தரப்புகளும் ஆட்டிலறிகளை பயன்படுத்திய சூழலில், பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டிருக்கும்.
எனினும், மனித உடல்களில் ஊடறுத்த எந்த ஆயுதமும் இரசாயன உமிழ்வைக் கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அவ்வாறு உடலில் இரசாயன ஆயுதப் பாதிப்பு எவருக்கேனும் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
அவ்வாறானவர்களின் விபரங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.