மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில்
முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ;டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை காவல்துறை தடை செய்தது. அது பற்றி ஏனைய கட்சிகள் வாயைத் திறக்கவில்லை. இம்முறையும் அரசாங்கம் கடந்த ஆண்டைப் போலவே நிலைமைகளைக் கையாளும் என்று கருத இடமுண்டு.
அண்மைக் காலங்களாக இடம்பெற்று வரும் கைது நடவடிக்கைகள் நினைவுகூரும் நிகழ்வுகளை தடுக்கும் நோக்கிலானவை என்று ஓர் அபிப்பிராயம் உண்டு. ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரே நன்மையாகிய ஒப்பீட்டளவில் அதிகரித்த சிவில் மற்றும் ஜனாநாயக வெளிக்குள்ள வரையறைகளை உணர்த்துவதே மேற்படி கைது நடவடிக்கைகளின் நோக்கம் என்றும் கருதப்படுகிறது. தமக்குக் கிடைத்த அதிகரித்த சிவில் வெளியைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் கட்டுப்படுத்தவியலா ஒரு வளர்ச்சியைப் பெற்றுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு மேற்கொள்ளப்பட்டவையே மேற்படி கைது நடவடிக்கைகள் என்று ஒரு வியாக்கியானம் உண்டு.
ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த பின்னரும் கூட அந்த ஆயுதப் போராட்டத்திற்கு அடிப்படையாக இருந்த அரசியல் அடித்தளமானது இன்னமும் உயிர்த்துடிப்புடன் இருப்பதாக பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து துலக்கமாக வெளிப்படுத்தப்பட்டுவரும் சமஸ்டிக் கோரிக்கையை அவர்கள் அவ்வாறுதான் பார்க்கிறார்கள். எனவே ஆயுதப் போராட்டம் இல்லை என்றாலும் கூட அதன் அடிச்சட்டமாகக் காணப்படும் அரசியல் உணர்வோட்டம் அப்படியே மாறாது உயிர்த்துடிப்போடு இருப்பது தென்னிலங்கையில் உள்ள ஒருபகுதி அரசியல்வாதிகளை அச்சுறுத்துவதாய் உள்ளது. இத்தகைய ஒரு பின்னணியில்தான் மேற்படி கைது நடவடிக்கைகளின் மூலம் தமிழ் மக்களுக்கான சிவில் மற்றும் ஜனநாயக வெளிக்கிருக்கும் வரையறைகளை அரசாங்கம் உணர்த்த முற்படுகிறதா?
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஸ்டிப்பதை மைத்திரி- ரணில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அனுமதிக்காது. தனது வாக்காளர்களைக் கவர்வதற்காக யு.என்.பி யின் துணை அமைச்சராகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலைப் பற்றி உரையாற்றியிருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். அது ஒரு தனிப்பட்ட அரசியல்வாதியின் விருப்பம்தான். நிச்சயமாக அவர் சார்ந்த கட்சியின் கொள்கை முடிவாக இருப்பதற்கில்லை. ஏனெனில் மைத்திரி-ரணில் அரசாங்கமானது முள்ளிவாய்க்கால் நினைவு நாளை உத்தியோகபூர்வமாக அனுமதிக்காமல் விடுவதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.
01.புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட அதன் பிரதானிகளில் பலர் உயிர் நீர்த்த காலகட்டமாக அது காணப்படுவது.
02. அங்கு நிகழ்ந்தது ஓர் இனப்படுகொலையே என்று தமிழ் மக்களில் கணிசமான தரப்பினர் நம்புவது.
03. கொல்லப்பட்டவர்களையும் காணாமல் போனவர்களையும் நினைவு கூர்வது என்பது அவர்கள் போராடக் காரணமாக இருந்த அரசியலை தொடர்ந்தும் உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும் என்பது.
04. அதை ஒரு இனப்படுகொலை என்று தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் நம்பும் ஒரு பி;ன்னணியில் அதை நினைவு கூர அனுமதித்தால் அது அதன் அடுத்த கட்டமாக அது தொடர்பான விசாரணைகளைக் கோரும் போராட்டங்களையும் ஊக்குவிப்பதாக அமையும்.
05. மகிந்த இப்பொழுதும் பலமாகவே இருக்கிறார். கடந்த வாரம் நிகழ்ந்த மே தின கூட்டங்கள் அதை மறுபடியும் நிரூபித்திருக்கின்றன. எனவே, உத்தியோகபூர்வமாக முள்ளிவாய்க்காலை நினைவுகூர விடுவது என்பது மகிந்த தரப்புக்கு அனுகூலமாகவே அமைந்துவிடும்.
06. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவும் அதிகரித்த சிவில் ஜனநாயகவெளி காரணமாகவும் தென்னிலங்கையில் சிவில் எதிர்ப்புக்களும் போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன் இவற்றை திசை திருப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உண்டு.
மேற்சொன்ன காரணங்களை முன்னிட்டு மைத்திரி – ரணில் அரசாங்கமானது முள்ளிவாய்க்கால் நினைவுநாளை உத்தியோகபூர்வமாக அனுமதிப்பதற்குத் தயாராக இருக்காது. அது மட்டுமல்ல. இந்த அரசாஙகத்தைத் தாங்கிப்பிடிக்கும் சக்திமிக்க நாடுகளும் இது விடயத்தில் அரசாங்கத்தையே பாதுகாக்க முற்படும். ஏனெனில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் உணர்வெழுச்சிகள் அவற்றின் அடுத்தகட்டமாக இனப்படுகொலைக்கான நீதியைக் கேட்கும் ஒரு வளர்ச்சிக்குப் போனால் அது இப்போதுள்ள வலுச்சமநிலையைப் பாரதூரமாகப் பாதிக்கும். எனவே, மாற்றத்தின் வலுச்சமநிலை குழப்பப்படுவதை மேற்கு நாடுகளும் விரும்;பப்போவதில்லை.
இத்தகையதோர் பின்னணியில் மைத்திரி – ரணில் அரசாங்கமானது யுத்த வெற்றி கொண்டாட்டங்களை வேண்டுமானால் அடக்கி வாசிக்கலாம். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அவர்கள் உத்தியோகபூர்வமாக அனுமதிப்பதற்கில்லை. ஆயின் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகிறது?.
கடந்த ஆண்டு செய்ததைப் போலவே கட்சிக்கோர் கூட்டம் கூட்டி நினைவு கூரப் போகிறார்களா? அல்லது அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்கமைக்கப் போகிறார்களா?
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் எனப்படுவது ஒரு கட்சிசார் நிகழ்வு அல்ல. அல்லது எதிர்ப்புக்களின் மத்தியில் வீரமாக விளக்கை ஏற்றும் சாகச நிகழ்வு மட்டும் அல்ல. அல்லது வாக்குவேட்டை அரசியலுக்காக வாய்வீரம் காட்டும் ஒரு நாள் நிகழ்வும் அல்ல. அது இவை எல்லாவற்றையும் விட பின்வரும் காரணங்களுக்காக ஆழமானது.
01.தமிழ்ப் பெரும்பரப்பில் நவீன வரலாற்றில் ஒரு போர்க்களத்தில் அதிகதொகையானோர் கொல்லப்பட்ட ஒரு பலிக்களம் அது. அதை நினைவு கூர்வது என்பது ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஓர் உந்துவிசையாக அமையும்.
02. அது ஒரு கூட்டுத் துக்கம். அந்த கூட்டுத் துக்கத்தை ஒரு கூட்டுக் கோபமாக, ஒரு கூட்டு ஆக்க சக்தியாக மாற்றினால்தான் அது தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியலுக்குரிய ஓர் இயக்கு விசையாக மாறும்.
03. இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வாகும். இன்னொரு விதத்தில் ஒரு மத நம்பிக்கையுமாகும். இறந்தவர்களின் ஆத்மா ஆறுதடைய வேண்டும் என்று நம்புகின்ற எல்லா உறவினர்களுக்கும் உள்ள பண்பாட்டு உரிமை அது. அதனாலேயே அது ஓர் அரசியல் உரிமையும் கூட.
04. இறந்தவர்களை நினைவு கூர்வதன் மூலம் அவர்களை இழந்தவர்களும் ஆறுதலடைய முடியும். வெளிப்படுத்தப்படாத கூட்டுத் துக்கம் ஒரு கட்டத்தில் கூட்டு மனவடுவாக மாறுகிறது. எனவே, இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது உளநல மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒரு சுகப்படுத்தல் பொறிமுறையாகும்.
எனவே மேற்சொன்ன காரணங்களின் நிமித்தம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் எனப்படுவது ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அதை கட்சிகள் தங்களுக்கிடையில் பிரித்து அனுஸ்டிக்கக் கூடாது. அது கட்சி சாரா நிகழ்வாக எல்லாச் சிவில் அமைப்புக்களும் மத நிறவனங்களும் பங்கு பற்றும் ஒரு பெரு நிகழ்வாக ஒரு கூட்டு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். எல்லாக் கட்சிகளில் இருந்தும் சிவில் அமைப்புக்களில் இருந்தும் மத நிறுவனங்களில் இருந்தும் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்து ஒரு பொதுக் குழுவை அமைத்து அப்பொதுக் குழுவே நினைவு கூர்தலைப் பொறுப்பேற்க வேண்டும்.ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்படுமாயிருந்தால் அதையும் மேற்படி குழுவே பராமரிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பது தொடர்பாகவும் உரையாடப்பட்டு வருகிறது. இதில் வடமாகாணசபையும் பங்கேற்கும் என்று கருதப்படுகிறது. சிவில் சமூகப் பிரதிநிதிகளும் வடமாகாணசபையும் இணைந்து அமைக்க உத்தேசித்திருக்கும் இந்நினைவுச் சின்னம் எவ்வாறு அமையப் போகிறது என்பது தொடர்பில் துலக்கமான செய்திகள் எவையும் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் வடமாகாணசபை இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக முடிவுகள் எதையும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு சின்னம் நிறுவப்படலாம் என்று வரும் ஊகங்களின் மத்தியில் இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் அநேகமானவை கலைநயம் குறைந்தவை. நவீனமற்றவை. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னம் ஒப்பீட்டளவில் பரவாயில்லை. யாழ். நகரப் பகுதியில் குறுகிய தூர இடைவெளிகளுக்குள் மூன்று நினைவுச் சின்னங்கள் உண்டு. தந்தை செல்வா நினைவுத் தூபி. தமிழராய்ச்சி மாநாட்டு நினைவுச்சின்னம், இவற்றுடன் அண்மையில் கட்டப்பட்ட ஊடகவியலாளருக்கான நினைவுச்சின்னம் என்பவையே அவை. இவற்றுள் வயதால் மூத்த தந்தை செல்வா நினைவுச் சின்னம்தான் ஒப்பீட்டளவில் கலைநயத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக மிக அண்மையில் கட்டப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபி எவ்வாறு உள்ளது?
பிறநாட்டவர்கள் பார்த்து பிரமிக்கும் அளவுக்கு நவீனமான அரூபமான நினைவுச் சின்னங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எத்தனை உண்டு? இது விடயத்தில் ஐரோப்பியர்களும்; அமெரிக்கக் கண்டத்தவர்களும் தமது நினைவுச் சின்னங்களை எவ்வளவு நவீனமாக வடிவமைத்துள்ளார்கள் என்பதிலிருந்து தமிழ் மக்கள் நிறையக் கற்க வேண்டும். ஏன் அதிகம் போவான்? சிங்கள மக்களிடம் இருந்தே கற்கலாம்.
எனவே அமைக்கப்படக்கூடிய நினைவுச்சின்னம் தமிழ் மக்களின் கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் காயங்களையும் பிரதிபலிப்பதாக மட்டும் அமையக்கூடாது. அக்கூட்டுத் துக்கம், கூட்டுக் காயம் என்பவற்றிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தமிழ் அரசியலின் நவீனத்துவத்தையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும்.
அதுபோலவே முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்டிப்பது எனப்படுவதும்; இறந்த காலத்திலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் புதுமையானதாக படைப்பாற்றல் மிக்கதாக அமைய வேண்டும்.அது ஒரு வணக்க நிகழ்வாகவும் இருக்க வேண்டும். சுகப்படுத்தல் நிகழ்வாகவும் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக ஆட்சி மாற்றத்தின் விரிவை பரிசோதிக்கும் அரசியல் தொடரியக்கமாகவும் இருக்க வேண்டும்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்து 16 மாதங்கள் ஆகிவிட்டன. இதில் தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு முக்கியமான நன்மை எனப்படுவது ஒப்பீட்டளவில் அதிகரித்த சிவில் ஜனநாயக வெளிதான். இந்த வெளியின் விரியும் தன்மையை பரிசோதிக்கும் விதத்தில் கடந்த 16 மாதங்களில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளோ அல்லது சிவில் அமைப்புக்களோ அல்லது செயற்பாட்டு இயக்கங்களோ எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றன?
விக்கினேஸ்வரனின் எழுச்சி எனப்படுவது மாற்றத்தின் விளைவுதான். ஆனால் அவருடைய உச்சம் இவ்வளவுதானா? என்று கேட்கத் தோன்றுகிறது. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வீதியில் இறங்கத்தக்க ஒருவராக அவர் தன்னை இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை. எந்த கொழும்பு உயர்குழாத்தின் மத்தியில் இருந்து அவர் அரசியலுக்கு வந்தாரோ அந்த உயர்குழாத்தின் நட்பை இழக்க தயாராகக் காணப்படுவது என்பது அவரளவில் ஒரு புரட்சிகரமன மாற்றம்தான். ஆனாலும் கூட்டுக்காயங்களோடும் கூட்டு மனவடுக்களோடும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு மேற்சொன்ன தகுதி மட்டும் போதாது.
விக்கினேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் ஒரு மாற்றத்தின் விளைவுதான். ஆனால் தமது தீர்வுத்திட்ட முன்வரபை இராஜதந்திரிகள் மத்தியில் பிரசித்தப்படுத்துவதில் காட்டும் அதே அளவு ஆர்வத்தை அவர்கள் வெகுசன மையச் செயற்பாடுகளிலும் இதுவரையிலும் காட்டியிருக்கவில்லை. ஒரு புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் ஒரு புரட்சிகரமான கட்சியோ அல்லது அமைப்போ இருக்க முடியாது என்று மார்க்சிய மூலவர்கள் கூறுவதுண்டு. தமிழ் மக்கள் பேரவையிடம் அவ்வாறான புரட்சிகரமான சித்தாந்த அடித்தளம் ஏதாவது உண்டா? அல்லது அதுவும் ஒரு மேட்டுக்குடி அரசியலைத்தான் முன்னெடுக்கப் போகிறதா?
நிலைமை இதுதான். ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த 16 மாதகாலப் பகுதிக்குள் ஒப்பீட்டளவில் அதிகரித்திருக்கும் சிவில் ஜனநாயக வெளியை தமிழ் மக்களால் இந்தளவுக்குத் தான் கையாள முடிந்திருக்கிறது. இதைவிட சிறப்பாக கையாள முடியுமா இல்லையா என்பது வரும்18 ஆம் திகதி தெரிந்துவிடும்.